இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் கொட்டும் மழையிலும், யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக முப்டைகள் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்புக்களுடன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதன்பின்னர், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ஏற்றுக்கொண்டனர்.
சங்கானை கலாசார மத்திய நிலைய மாணவிகளின் நடன நிகழ்வு இடம்பெற்றதைத் தொடர்ந்து, யாழ்.மாவட்ட பாடசாலை மாணவர்களின் பேன்ட் இசை மற்றும், மாணவர் படையணியின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், யாழ். மாவட்ட இராணுவத்தளபதி, அரசஅதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். வடக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழையுடனான காலநிலை நிலவுகின்றது. இந்நிலையில் இன்று காலையும் பலத்த மழை பெய்தது. எனினும், கொட்டும் மழையிலும் தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் – ஐ.சிவசாந்தன்