இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்பிற்கும், தனது இந்திய பயணத்திற்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு – விஜயராம பகுதியிலுள்ள அவரது வீட்டில் நேற்றையதினம் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் ஆட்சி பீடம் ஏறும் பட்சத்தில், தமிழ் மக்களுடன் நேரடியாக கலந்துரையாடல்களை நடத்தி, அரசியல் தீர்வை பெற்று கொடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்ததற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் எனவும் குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்கு ஆதரவை வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கான அடிப்படை வசதிகளும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தப்படும்போது, அவர்களுக்கான அரசியல் தீர்வுகள் தன்னிச்சையாகவே கிடைக்கும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் இதன்படியே, மத்தியிலுள்ள அதிகாரங்களை பகிர்தல், உள்ளுராட்சி சபைகளுக்கான அதிகாரத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே, 13ஐ தாண்டிய எண்ணத்தை தான் வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே, தமிழர்களுக்கான தீர்வுத்திட்டத்தை வழங்க முடியும் என்ற எண்ணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளதாகவும் அந்த விடயத்தில் தமிழ்த் Nதுசிய கூட்டமைப்பு தோல்வி கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.