குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் குருநகர் இறங்கு துறையைத் துறைமுகமாக அபிவிருத்தி செய்து தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு கைதடியில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற போது குருநகர் கடற்றொழிலாளர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
‘குருநகர் இறங்கு துறை ஆரம்ப காலத்தில் துறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டது. எனினும் உள்நாட்டுப் போரின் காரணமாக அவை தகர்க்கப்பட்டு, தற்போது அதனை அண்டிய பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படாமல் உள்ளது.
இறங்குதுறையைத் துறைமுகமாக ஆழமாக்குவதன் ஊடாக படகுகள், கப்பல்கள் வந்து செல்லக் கூடிய சாத்தியங்கள் உருவாகும். அத்துடன் அதனை அண்டிய பிரதேசங்களும் அபிவிருத்தி அடையும்.
எனவே அங்கு அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி , குருநகரில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையை ஆராய்ந்த ஆளுநர், அந்தப் பகுதியில் முழுமையான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.