இலங்கையில் கடற்படைத்தளம் அமைக்கும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆசிய கடற் மையத்தில் அமெரிக்க கடற்படைத் தளங்கள் அமைந்துள்ளமையால், அமெரிக்காவுக்கு அவ்வாறான இலக்கு ஒன்றும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்க கடற்படை கப்பல் இலங்கைக்கு வருவதனால், அவர்களுக்கு இராணுவத்தளம் எதனையும் அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் பிரதமருக்கான பதில் அளிக்கும் நேரத்தில் எதிர்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, அமெரிக்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கையில் முன்னெடுக்கும் விதமாக இலங்கையில் இராணுவ கடற்படைத் தளம் அமைக்கப்படுவதாக குற்றம் சுமத்தியமை தொடர்பில் பதிலளித்த போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை அங்கீகாரம் இல்லாமல், இவ்வாறு அமெரிக்கா தனது தளங்களை அமைக்க முடியுமா எனும் வாசுதேவ நாணயக்காரவின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் அத்தகைய நோக்கங்கள் எதுவும் அமெரிக்காவுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.