மணல் கொள்ளையைத் தடுக்கத் தனியார் வானூர்திகளை ஏன் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கரூரைச் சேர்ந்த ஒருவார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சட்டவிரோதமான மணல் குவாரியைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் மணல் கொள்ளையைத் தடுக்கத் தானியங்கி வானூர்திகளை அல்லது செயற்கைக்கோள் படங்களை ஏன் பயன்படுத்தக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதனைக் க் கண்காணிக்கக் குழு அமைக்குமாறு தமிழக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளனர். மணல் திருட்டில் சில அரசாங்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளமையினால்தான் இன்னும் இந்த விடயத்தில் எந்த முடிவும் கிடைக்காமல் உள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள் இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு உதவ, சென்னை ஐஐடியின் இயக்குநரை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்ப்பதாக உத்தரவிட்டு வழக்கினை பெப்ரவரி 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.