அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகள் சம்பந்தமாக என்னால் 2019 சனவரி மாதம் 25 ஆந் திகதியும் இந்த மதிப்புமிக்க சபையில் ஒரு கூற்று முன்வைக்கப்பட்டது.
அங்கு நான் வெளிப்படுத்தியவாறு அரசியலமைப்பு பேரவையினால் 41 ஆ உறுப்புரையில் குறிப்பிடப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக பெயர் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கையிலும் அரசியலமைப்பின் 41 இ உறுப்புரையில் குறிப்பிட்ட பதவிகளுக்காக ஆட்களை நியமிப்பதற்காக அதிமேதகு சனாதிபதியவர்களால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட பெயர் முன்மொழிவுகளை அங்கீகரிக்கையிலும் கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டல்களை உள்ளிட்ட அறிக்கையொன்று 2016.12.08 ஆந் திகதி என்னால் பாராளுமன்ற சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்பட்டதென்பது அறிவிக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக மேற்படி வழிகாட்டல்கள் உள்ளடங்கிய அறிக்கை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவலுக்காக நாளைய தினம் மீண்டும் இந்த பராளுமன்றத்தின் சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு பதவிக்குமான ஆட்களை நியமிக்கும் போது மேற்படி வழிகாட்டலைப் போன்றே குறிப்பிட்ட ஆளின் மூப்புரிமை, நேர்மை, சுயாதீனத்தன்மை மற்றும் பக்கசார்பற்றத்தன்மையும் பேரவையினால் கவனிக்கப்படுகின்றதென குறிப்பிட வேண்டும்.
மேலும், அரசியலமைப்பு பேரவையின் உள்ளடக்கம் பற்றியும் நான் குறிப்பிட எதிர்பார்க்கின்றேன். பேரவையின் அங்கத்தவர்களாக, ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதம அமைச்சரும், எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவரும் பதவி வழியாக நியமிக்கப்படுவர். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சனாதிபதியவர்களால் நியமிக்கப்படுவார். மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பிரதம அமைச்சரினதும் எதிர்க்கட்சித் தலைவரினதும் இணக்கப்பாட்டின் பேரில் நியமிக்கப்படுவதோடு, மற்றைய பாராளுமன்ற உறுப்பினர் ஏனைய கட்சிகளின் இணக்கப்பாட்டில் பேரவையின் அங்கத்தவராக நியமிக்கப்படுவார். பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்த பின்னரே சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்கள் நியமிக்கப்படுவர். அதாவது ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஓர் உறுப்பினரும் மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளும் அரசியலமைப்புப் பேரவையில் உறுப்பாண்மையை கொண்டுள்ளனர். ஆகவே, நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளினதும் கருத்துக்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் இப்பேரவையின் உள்ளடக்கம் உருவாகியுள்ளது என்பதே எனது கருத்தாகும்.
மேற்படி விடயங்களுக்கு மேலதிகமாக அதிமேதகு சனாதிபதி அவர்கள் கௌரவ நீதியரசர்களின் நியமனம் தொடர்பாக அரசியலமைப்பு பேரவையினால் பின்பற்றப்படுகின்ற முறைமையைப் பற்றி நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதில் உள்ளடங்கியுள்ள சில விடயங்கள் தொடர்பாக தெளிவுரையை வழங்குவது அரசியலமைப்பு பேரவையின் கடமையெனக் கருதுகின்றேன்.
மேலும், குறிப்பாக இவ்விடயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதற்கான காரணம் மிகவும் பாரதூரமானதும் பக்கச்சார்பற்றதுமான செயன்முறை ஒன்றை ஈடேற்றுகின்ற மூன்று சிவில் சமூக பிரதிநிதிகளினதும் அரசியலமைப்பு பேரவையின் ஏனைய கௌரவ உறுப்பினர்களினதும் சுய கௌரவத்தையும் அபிமானத்தையும் பாதுகாத்து தருவதும் அரசியலமைப்பு பேரவையின் ஆரம்பகாலம் முதல் இற்றைவரை நியமனங்களை அங்கீகரித்த கௌரவ பிரதம நீதியரசர்கள், கௌரவ உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிபதிகள் ஆகியோரின் கௌரவத்தை பாதுகாத்துத் தருவதும் அரசியலமைப்பு பேரவையின் கடமையாக கருதப்படுவதாலாகும்
என்னால் அதிமேதகு சனாதிபதிக்கு அனுப்பப்பட்ட 02. 01. 2019 ஆம் திகதிய கடிதத்தில் தகுதிவாய்ந்தவர்களைத் தெரிவு செய்யும்போது எம்மால் பின்பற்றப்படுகின்ற முறையியல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் ” மூப்புரிமையானது எவ்வகையிலும் கருதப்படுவதில்லை” என அரசியலமைப்புச் சபை தெரிவித்ததாக கூறியிருப்பது தவறான கூற்றாகும்.
மூப்புரிமை என்பது மட்டும் ஒரே அளவுகோலாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதனையே நாங்கள் தெரிவித்தோம்.
நாங்கள் அங்கீகரித்த அனைத்துப் பெயர்களும் அதிமேதகு சனாதிபதியினால் விதப்புரை செய்யப்பட்ட பட்டியல்களில் உள்ளடங்கியுள்ள பெயர்கள் மட்டுமே என்பதனையும் அரசியலமைப்புச் சபையினால் தான்தோன்றித்தனமாகவோ வெளிவாரியாகவோ எந்த ஒரு பெயரினையும் விதப்புரை செய்யப்படவில்லை என்பதனையும் இந்த மதிப்புமிக்க சபைக்குத் தெரிவிக்க வேண்டும். எனவே, அவரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பெயர்களிலிருந்து பொருத்தமான பெயர்களைத் தெரிவு செய்யும்போது எந்தவொரு முறைகேடோ அநீதியோ ஏற்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எமக்கு இதில் தவறேதும் இருப்பதாகவும் தெரியவில்லை.
அரசியலமைப்புப் பேரவை 12 பெயர்களை நிராகரித்துள்ளதாக சனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளபோதும், அந்தக் கூற்றும் தவறானது.
வெற்றிடம் ஒன்றுக்கென 3 அல்லது 4 பெயர்களை சிபாரிசு செய்யும்போது, நாம் ஒருவரின் பெயரை மட்டுமே தெரிவுசெய்கின்றோம். இந்நிலையில், அவ்வாறான சந்தர்ப்பங்களை நிராகரித்தல் எனக் குறிப்பிடுவதானது அரசியலமைப்புப் பேரவைக்குச் செய்யும் அநீதியாகும்.
மூப்புரிமை மாத்திரம் கவனத்தில்கொள்ளப்படுமாயின் அரசியலமைப்புச் சபை ஒன்றுக்கான அவசியமில்லை. அதிமேதகு சனாதிபதியினால் அவ்வாறு செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு விவாதத்தில் ஈடுபட நாம் எதிர்பார்க்கவில்லை. 19ஆவது திருத்தத்தின்படி அழுத்தங்களின்றி தகுதியானவர்களைத் தெரிவு செய்தல் எமது பணியாகும். நாம் அப்பணி செவ்வனே நிறைவேற்றப்பட்டுள்ளதென நம்புகிறோம். நாம் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, சபையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றன. ஒரு தரப்பினருக்கான பெரும்பான்மை காணப்படுவதில்லை. பெயர்களை அங்கீகரிக்கையிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை. சுயாதீனமாக தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் வாய்ப்பு அங்கத்தவர்களுக்கு உள்ளது. அரசியமைப்பு பேரவை தாபிக்கப்பட்டது முதல் இற்றைவரை நாங்கள் மேற்கொண்ட அனைத்து தீர்மானங்களும் இறுதியில் உடன்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் என்பதை முன்னாள் மற்றும் தற்போதைய அங்கத்தவர்களுக்கு மதிப்பளிக்குமுகமாக தெரிவித்துக்கொள்கின்றேன். இதுவரையில் அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பெயர்களில் ஒரு சிலவற்றைத் தவிர அநேகமானவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நாங்கள் குறிப்பிட்ட தரப்பினருடன் கடிதக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதில்லை. முதனிலை, நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கான நியமனங்கள் தொடர்பிலும் அரசியலமைப்பு பேரவைக்கு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நியமனங்களை மேற்கொள்கையில், உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நியமனங்கள் மாத்திரமே எமது மேற்பார்வைக்கு உட்படுகின்றன. இதற்கு பொறுப்புக் கூறவேண்டியது நீதிச் சேவைகள் ஆணைக்குழுவாகும். ஆகையால், இக்குற்றச்சாட்டானது நியாயமற்றது.
இலஞ்ச ஆணைக்குழு முன்னிலையில் அல்லது ஏனைய குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான ஆட்கள் மற்றும் அவ்வாறின்றேல், கௌரவ பிரதம நீதியரசரது விதப்புரைகளும் பொருத்தமற்றதாக அமைந்தவிடத்து குறிப்பிட்ட நியமனங்களை அங்கீகரிக்காதிருந்தோம்.
அத்தோடு அரசியலமைப்பு பேரவையினால் ஏற்படுத்தப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் காரணமாக இன்று எமது நாட்டுக்கு பெரும் மதிப்பு ஏற்பட்டுள்ளது. எமது உயரிய நீதித்துறை சர்வதேச ரீதியாக பாராட்டுதல்களை பெற்றுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உலகின் சிறந்த சுயாதீன ஆணைக்குழுக்களில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பாராட்டினை பெற்றுள்ளது. தகவலறிதலுக்கான சட்டத்தை தலைச்சிறந்த சட்டங்களில் ஒன்றாக சர்வதேச சமூகம் அங்கீகரித்துள்ளது.
மார்ச்சு மாதத்தில் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டில் எமது நாட்டுக்கு எதிராக சுமத்தக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு மேற்குறிப்பிட்ட துறைகளில் நாம் அடைந்துள்ள முன்னேற்றம் இலங்கைக்கு வலு சேர்க்குமென ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தடவைகள் இவ் விடயம் தொடர்பான விளக்கத்தை வழங்குவதற்கு தேவைப்படின் அதிமேதகு சனாதிபதி அவர்களை சந்தித்து அது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு விருப்பத்துடன் இருப்பதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் எம்மால் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறின்றி சுயாதீன நிறுவனங்கள் தீவிரமாக விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுவது நீண்டகால அடிப்படையில் நாட்டுக்கு செய்யும் பாதிப்பாகுமென கௌரவத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நேற்றைய தினம் விமர்சிக்கப்பட்டது. இது பற்றி நாட்டுக்கு விளக்கமளிக்குமாறு நாங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவுரை வழங்கியுள்ளோம்.
எவ்வாறாயினும் அதிமேதகு சனாதிபதியினால் குறிப்பிடப்பட்ட இரண்டு விடயங்கள் பற்றி அதன் உறுப்பினர்களை மதிக்கும் வகையில் தெளிவுபடுத்துவது அரசியலமைப்பு சபையின் கடமையெனக் காண்கிறோம்.
அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு STF வீரர்களை அனுப்பியமை பற்றி முறையான அறிக்கையொன்றை கோரியிருந்தமையானது இது பற்றி பல்வேறு தரப்பினர் கருத்துக்களை சமர்ப்பித்தமையாலேயே என்பதும், இவ்வாறு முன்வைத்த கருத்துக்களுக்கு ஏற்ப இச்செயல்முறையில் எவ்வித எதிர்ப்புக்களையும் தெரிவிக்கவில்லையெனவும் எமக்கு அவ்வாணைக்குழு ஊடாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் தற்போதைய செயல்முறையில் கருத்துக்களை தெளிவுபடுத்தியமையை மட்டுமே கடைப்பிடித்தனர்.
ஐக்கிய நாடுகள் தாபனம் / முப்படை /வெளிவிவகார அமைச்சு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய சகல தரப்பினர்களினதும் இணக்கத்துடன் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமையவே மாலி தேசத்திற்கு அனுப்பப்பட்ட படைவீரர்களை வாபஸ் பெறுவது தாமதமடைந்தது.
தற்போது உலகில் அமைதிப் படை நடவடிக்கைகளுக்கு அலுவலர்களைத் தொிவுசெய்யும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள ஒரே நிறுவனம் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மாத்திரமே என இலங்கையின் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பிரதிநிதி எமக்கு அறிவித்துள்ளார்.
இதன் மூலம் சர்வதேசம் எமது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மீது வைத்துள்ள நம்பிக்கை உறுதியாகின்றது. எனவே விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் நியாயமானதாக அமைவது முக்கியமானதாகும்.