210
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் பிரபல இயக்குனர் பாலா இயக்கிய வர்மா திரைப்படத்தை கைவிடுவதாகவும், மீண்டும் திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் அதில் பாலா இயக்குனர் இல்லை என்றும் படத்தை தயாரித்துள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழின் மிக முக்கியமான இயக்குனராக அறியப்பட்டவர் பாலா. இவர், சேது, பிதாமகன், பரதேசி, நாச்சியார் உள்ளிட்ட கவனத்தைப் பெற்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தனது திரைப்படங்களில் பணியாற்றியுள்ள கலைஞர்களுக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுக்கும் சிறந்த கலைஞராகவும் மதிக்கப்படுகின்றார்.
பிரபல முன்னணி, இயக்குனர் ஒருவர் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில், அத் திரைப்படத்தை கைவிடப்படுவதாகவும் மீண்டும் அந்த திரைப்படத்தை புதிய இயக்குனரை கொண்டு இயக்கப் போவதாகவும் அறிவிக்கப்படும் அறிவித்தலை முதன் முதலில் திரையுலகம் சந்திகின்றமை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நாச்சியார் திரைப்படத்தை தொடர்ந்து, பாலா, அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்குப் படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் மீள் உருவாக்கம் செய்துள்ளார். பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படம், வெளியீட்டுக்கு தயாரான நிலையில் இருந்தது.
இந்த மாதம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை கைவிடுவதாக படத்தை தயாரித்துள்ள இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. மேலும் படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதால், படத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக அந் நிறுவனம் கூறியுள்ளது.
அத்துடன் வர்மா படத்தை துருவ்வை வைத்தே மீண்டும் முதலில் இருந்து எடுக்க முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள், கலைஞர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவுள்ளதாகவும் விரைவில் இத் திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து 2019 ஜூன் மாதத்தில் வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அந் நிறுவனம் கூறியுள்ளது.
Spread the love