விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்திக் கொண்டு இருந்தால், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஆளுநருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, உள்ளிட்ட 7 பேரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள அவர்களை விடுவிக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவு செய்தது.
இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றம் சென்றிருந்தது. இந்த வழக்கில் 2018 செப்டம்பர் 6-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனினும், தமிழக அரசின் பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலதாமதம் செய்து வருகிறார். இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலாலுக்கு நளினி கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த முறை உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என்று கடிதத்தில் உறுதியாக க் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் வேலூரில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய நளினி, 5 நாட்களுக்குப் பின் அதை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, விடுதலை உத்தரவில் விரைந்து கையெழுத்திட ஆளுநருக்கு நளினியின் தாயார் பத்மாவும் கடிதம் அனுப்பியுள்ளார்.