ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பமாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை தாமதப்படுத்துவதற்கு பிரித்தானிய மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என பிரித்தானியா முடிவெடுத்தநிலையில் அப்போது இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மையான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்தனர்.
அதற்கேற்ப ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முறைப்படி விலகுவதற்கான நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வரும் நிலையில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை பிரித்தானிய பாராளுமன்றம் நிராகரித்து இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஒரு தீர்மானம் வர உள்ள நிலையில், பிரெக்சிற் தொடர்பில் மக்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை அறிய மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பிலேயே இவ்வாறு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 53 சதவீதமானோர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை பிரித்தானியா தாமதப்படுத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இரண்டாது பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் அல்லது பிரசெல்சில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை 49 சதவீதமானோர் ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறினால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பிரக்ஸிற் தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக, கடந்தாண்டு வரை 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை பிரித்தானிாவில் இருந்து நெதர்லாந்துக்கு மாற்றியுள்ளன அல்லது மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளன என, நெதர்லாந்து தெரிவிக்கிறது.
இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட நெதர்லாந்தின் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான முகவராண்மை, 42 நிறுவனங்கள் இவ்வாறு தமது நாட்டுக்கு வருகின்றமை காரணமாகச் சுமார் 2,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுமென்றும் பாரிய தொகையிலான அமெரிக்க டொலர் முதலீடுகள் கிடைக்கப்பெறுமெனவும் தெரிவித்தது.
இவ்வாறு இடமாறுவதாக அறிவித்துள்ள நிறுவனங்களில் அநேகமானவை ஐ.இராச்சியத்தைச் சேர்ந்தவையெனவும், இன்னும் சில, ஆசியாவையோ, ஐ.அமெரிக்காவையோ சேர்ந்தவையெனவும் நெதர்லாந்து தெரிவிக்கிறது.
நெதர்லாந்து தவிர, ஜேர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து போன்ற நாடுகளுக்குச் செல்வதற்கும் பல நிறுவனங்கள் முயல்கின்றன எனவும், நெதர்லாந்துத் தரப்புத் தெரிவிக்கிறது.