ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றார்.
ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டபோது, இந்தப் பிரிவினால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்டுவதற்காக ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு, சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படும் என காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு உறுதி அளித்திருந்தது.
அதன்பின் 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான மத்திய அரசு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலத்தைக் கடத்தி வருகின்ற நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சந்திரபாபு நாயுடு பிரதமர் அலுவலகத்துக்குப் பலமுறை கடிதம் எழுதியுள்ளா.
ஆந்திரத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு தங்களுக்கு உதவி செய்யவில்லை என்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி கடந்த ஆண்டு வெளியேறியதுடன் மோடிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து தோல்வியும் அடைந்தது.
இந்த நிலையில் ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்து இன்று டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொள்கின்றார்
.
டெல்லியிலுள்ள ஆந்திர பவனில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது. . இதில் தெலுங்கு தேச கட்சி நட்டமன்ற உறுப்பினர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆந்திர மாநில அரசு ஊழியர் சங்கங்களின் தலைவர்கள், ஆந்திர மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.