சிரியாவின் கடைசி பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டெடுப்பதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன. 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிரியா, ஈராக் நாடுகளின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததனையடுத்து அவர்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் இவ்விரு நாடுகளிலும் களம் இறங்கி பல முக்கிய நகரங் மீட்டெடுத்துவிட்டன. எனினும் இவ்விரு நாடுகளிலும் இன்னும் 14 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் இருப்பதாக ஐ.நா. சபை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள கடைசிக் கிராமமாக ஈராக் எல்லையில் அமைந்துள்ள பாகுஸ் கிராமம் அமைந்துள்ள நிலையில் அங்குள்ள அப்பாவி மக்கள் 20 ஆயிரம் பேரையும் வெளியேறுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் வெளியேறியுள்ள நிலையில் அந்த பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள், ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் கடுமையான சண்டையிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த சண்டையின் முடிவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவில் இருந்து முழுமையாக ஒடுக்கப்பட்டு விடுவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.