ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கும் தங்களுக்கு தொடர்பில்லை என பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. நேற்றையதினம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விடுமுறைக்குச் சென்ற சிஆர்பிஎப் வீரர்கள் 78 வாகனங்களில் அணிவகுத்துச் சென்றபோது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று வேகமாக வந்து மோதியதில் 44 வீரர்கள் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பலர் படுகாயமடைந்த nநிலையில் இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு இத்தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அமைப்பில் புதிதாக இணைந்துகொண்ட அடில் அகமது என்பவரே இத்தாக்குதலை நடத்தியதாகப் பொறுப்பேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இத்தாக்குதலுக்கும் தங்கள் நாட்டுக்கும் எந்தவிதத்திலும் தொடர்பு இல்லையென பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.