பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடி உள்ளார். இன்று இன்று அங்கு சென்ற அவர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதில் பிரதமர் தலைமையிலான குழுவினர் மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்து திணைக்கள அதிகாரிகள் மட்டத்தில் ஆராய்ந்தனர்.
இதன்பொது, மீள்குடியேற்றம், இராணுவத்தினர் வசமுள்ள காணி விடுவிப்பு தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டதோடு, முல்லைத்தீவு மாவட்டம் சிறந்த மாவட்டமாக மாற்றியமைக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 20 விவசாயிகளுக்கு, கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி நிறுவனத்தினூடாக பத்து இலட்சத்து 28 ஆயிரத்து 440 ரூபாய் பெறுமதியான இழப்பீட்டு கொடுப்பனவு பிரதமரினால் வழங்கப்பட்டது. அத்துடன் பதினொரு விவசாயிகளுக்கு கடன் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு பிரதமரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ரிஷாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றம் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோருடன் பிரதேச சபைத் தவிசாளர்களும் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.