ஈராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசொன்றை பிரகடனம் செய்திருந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்போது சிரியாவின் மிகக்குறுகிய நிலப்பரப்பொன்றுக்குள் சிக்கியுள்ளதனால் அவர்களின் காலம் முடிவடைகிறதென எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஈராக்கில் தோற்கடிக்கப்பட்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்போது, சிரியாவின் கிழக்குப் பகுதிக் கிராமமான பகோஸில், சுமார் அரைச் சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் சிக்கியுள்ளனர்.
இந்தநிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பான அறிவித்தலை, கடந்த 16ம் திகதி சனிக்கிழமை வெளியடப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த போதிலும் பொதுமக்களைக் காப்பதற்காக கூட்டுப்படையின் நடவடிக்கைகளை மெதுவாக மாற்றியுள்ளதாக சிரியாவைச் சேர்ந்த தளபதியொருவர் தெரிவித்துள்ளர்h.
அந்தக் கிராமத்தினுள் சிக்கியுள்ள பொதுமக்கள், மனிதக் கேடயங்களாக வைக்கப்பட்டுள்ளனர் எனவும், அதனால் இவ்விடயத்தில் பொறுமையுடன் செயற்படுவதாகவும் தமது படைகளிடம், ஐ.எஸ். ஆயுததாரிகள் பலர் சரணடைந்துள்ளனர் எனவும் அத்தளபதி தெரிவித்துள்ளார்.
ஈராக் – சிரிய எல்லைக்கு அருகில் காணப்படும் இக்கிராமத்தில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக, அப்பகுதியின் பெரும்பாலான பகுதிகள் தரைமட்டமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது