குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மனித புதைகுழியின் கார்பன் பரிசோதனைக்கான அறிக்கை மன்னார் நீதி மன்றத்தினூடாக இன்று புதன் கிழமை வெளி வரும் என எதிர் பார்க்கப்பட்ட போதும் குறித்த அறிக்கை வெளியிடப் படவில்லை.
பரிசோதனைக்கான அறிக்கை உத்தியோக பூர்வமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைக்காத நிலையில், கிடைக்கப் பெற்ற அறிக்கையினை வெளியிட முடியாது எனவும், பீட்டா நிறுவனத்தில் இருந்து மன்னார் நீதிமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிக்கை கிடைத்தவுடனுமே ,வெளியிட முடியும் எனவும் மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா இன்று புதன் கிழமை தெரிவித்தார்.
மன்னார் மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை கடந்த 16 ஆம் திகதி அதிகாலை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ பீட்டா இணையத்தளத்தில் பிரவேசித்து ஆய்வறிக்கை பெற்றுக் கொண்டுள்ளார்.
மனித எச்சங்களின் 6 மாதிரிகள் மீதான கார்பன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு ஆவற்றில் 5 மாதிரிகளின் அறிக்கைகள் கடந்த சனிக்கிழமை (16) பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையினை சட்ட வைத்திய அதிகாரி இன்று புதன் கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் கையளித்துள்ள நிலையில், அது தொடர்பாக விசாரணைகள் இன்று மாலை மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் இடம் பெற்றது.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
இதன் போது நீதவான் அவ்வாறு தெரிவித்தார்.
குறித்த நிறுவனத்தினர் மன்னார் நீதிமன்றத்திற்கு கார்பன் பரிசோதனை அறிக்கையை அனுப்பி வைக்கும் பட்சத்தில் குறித்த அறிக்கைகள் ஒரு பகிரங்க ஆவணமாக காணப்படும் என்பதால் அதனை எவரும் பெற்றுக்கொள்ள முடியும் நீதவான் மன்றில் தெரிவித்தார்.
இதே வேளை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ ஒரு விண்ணப்பதாரி என்பதினால் கார்பன் பரிசோதனைக்கான அறிக்கையை பெற்றுள்ளதாகவும், குறித்த அறிக்கையினை உத்தியோகபூர்வமான அறிக்கையாக மன்னார் நீதிமன்றம் கருதவில்லை எனவும், குறித்த அறிக்கை மன்னார் நீதிமன்றத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டவுடன் அது தொடர்பில் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படும் என நீதிபதியினால் மன்றில் தெரிவிக்கப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
இன்றைய தினம் அகழ்வு பணிகள் இடம் பெற்றது.மன்னார் நீதவான் நேரடியாக சென்று அகழ்வு பணிகளை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.