Home இலங்கை நிலையான சமாதானத்தை உருவாக்குவோம் – சிவலிங்கம் அனுஷா

நிலையான சமாதானத்தை உருவாக்குவோம் – சிவலிங்கம் அனுஷா

by admin

இலங்கையில் சமநிலையான பொருளாதார அபிவிருத்தியைக் கட்டி எழுப்புவது தொடர்பாக வறுமை ஆராய்ச்சி நிலையத்தால் நடாத்தப்பட்ட ஒரு பகுப்பாய்வின் மூலம் (நவெம்பர்,2017) இந்த கட்டுரையானது எழுதப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்து முடிந்த யுத்தத்தின் மிகப்பெரும் தாக்கங்களுக்குள்ளா ஒரு மாகாணமாக கிழக்கு மாகணத்தை கூற முடியும். யுத்தம் முடிந்த பின்னர் பல்வகையான அபிவிருத்தி திட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கை நோக்கி நகர்த்தப்பட்டிருந்தன. சில திட்டங்கள் போர் நடந்த காலத்தில்கூட மேற்கொள்ளப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. கிழக்கை நோக்கிச் சென்ற சில வேலைத்திட்டங்கள் சமாதானத்தை கட்டி எழுப்பும் நோக்கோடு அமைந்திருந்தன. போர் சூழலிலும் போர் முடிந்த பின்னரும் சமாதானம், ஒருமைப்பாடு, ஒற்றுமை போற்ற சொற்களே சமாதானத்திற்கான வேலைத்திட்டங்களிலும், செயற்பாட்டுகளிலும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் நல்லாட்சி அரசின் கீழ் சமாதானத்திற்கான சொல்லாக நல்லிணக்கம் என்னும் சொல் நடைமுறைக்கு வந்தது.

இந்த பகுப்பாய்வானது அம்பாறை மாவட்டத்தில் உகனை, இறக்காமம், நாவிதன்வெளி, சம்மாந்துறை, கல்முனை மற்றும் தீகவாபியாவில் மேற்கொள்ளப்பட்டது. அம்பாறையில் நில அளவு 4415 கி.மீ. ஆகும். அம்பாறையைச் சேந்த மக்களின் பிரதான வருமானம் விவசாயத்தையே நம்பியுள்ளது. அது பெரும்பாலும் வயல் தொடர்பான விவசாயமாக உள்ளது. இதற்கு அப்பால், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களும், கடல் தொழில் செய்யும் நபர்களும், சிவில் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டிருக்கும் நபர்களும் அதிகமாக அங்கு உள்ளனர்.

போருக்கு பின்னரான காலப்பகுதிகளில் அம்பாறையில் நடாத்தப்பட்ட செயற் திட்டங்களின் பல திட்டங்கள் சமாதானத்தை கொண்டுசெல்லும் முகமாக அமைந்திருந்தன. குறிப்பாக சர்வதேச அரசார்பற்ற நிறுவனங்கள், இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அரசு சார்ந்த நிறுவனங்கள் அவ்வாறான செயற்திட்டங்களை நாடாத்தின. அம்பாறைக்கு சென்று அங்கு நடந்துக்கொண்டிருக்கும் அபிவிருத்தி திட்டங்கள் என்ன? என்று அங்குள்ள மக்களிடம் கேட்டால் மந்திரம் உச்சரிப்பது போல அவர்கள் கூறும் வார்த்தை நல்லிணக்க செயற்பாடு என்பதாகவே இருந்தது. அம்பாறையில் நல்லிணக்கத்திற்காக செயற்திட்டங்களை நடாத்திய, நடாத்திக்கொண்டிருக்கும் பல் வகையான அமைப்புகள் உள்ளன.

அது ஜெயிக்கா (யப்பான் நிறுவனம்), helvitas, USAID, Asia Foundation, Islamic relief, Red Cross, Caritas, Caritas EHED, NERPH, UN Habitat, UNICEF, UNDP, World Bank, ADB, IOM, ILO, Mercy Crops, CAFOD, National peace, Woman Development foundation in Akkaraippaththu, Search for common ground, Centre for peace building and reconciliation, ONUR (ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம்) , Ministry of National Integration and reconciliation, British Council, ILEAD, Ministry of Rehabilitation and resettlement, Ministry of National languages and co-excisions, SCRM , District Reconciliation Forum (NIR)மற்றும் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களினால் ONUR அமைப்பு மற்றும் பொருளாதார அமைச்சின் ஊடாக நாடாத்தப்படும் நிகழ்சிகள் (District and provincial wise program under the Divisional secretarial from ONUR Fund and ministry of economic) ஆகியவையாகும்.

இந்தத் திட்டங்கள் சமாதானத்தை கட்டி எழுப்புவதற்காக மேற்கொள்ளப்படுகின்றன. அதில் பல திட்டங்கள் பொருளாதார அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி என நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சில திட்டங்கள் இனங்களுக்கிடையில் கலாசாரம், உணவு போன்றவற்றை பரிமாற்றம் செய்வதனூடாக மேற்கொள்ளப்படுகின்றமை கண்டறியப்பட்டது. இவ்வாறான பல திட்டங்கள் இருந்தும் இனங்களுக்கிடையிலான இடைவெளியைக் குறைக்க முடியாமலிருப்பதை நாம் ஆராய வேண்டும். இவ்வகையான கேள்விகளுக்கு அல்லது காரணங்களுக்கு விடை தேடும்போது, விடையின்றி இருப்பதே பதிலாக அமைகின்றன.

முக்கியமாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த போர் முடிவிற்கு வந்திருந்தாலும் போர் நடைபெறக் காரணமான மூல காரணங்களை கண்டறிந்து அதற்கான தீர்வுகள் அல்லது முறையான செயற்திட்டங்களை முன்னெடுக்காமல் இருப்பதும், போரினால் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் பெற்ற அனுபவத்திலிருந்து மக்கள் வெளியே வர முடியுமால் நிற்பதும் இந்த இடைவெளியை நிர்ணயிக்கின்றது. தீர்வுகளுக்கான போராட்டங்கள், செயல்முறைகள் ஒருபக்கம் இருக்கும்போது இனங்களுக்கு எதிரான புதியப் பிரச்சினைகளும் உருவாகிக்கொண்டிருக்கின்றன. அதனாலேயே பக்கத்துவீட்டுகாரரின் தோட்டத்திற்குள் குப்பையை வீசுவது, பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையில் ஏற்படும் மோதல்கள் போன்றவற்றைக்கூட இனப் பிரச்சனைகளாக இந்த சமூகம் இனங்காணுகின்றனது.

அத்துடன் நாட்டில் நிர்வாகத்தினுள்ள பிரச்சனைகளினாலும் இனங்களுக்கிடையில் பிரச்சனைகள் நடந்துக்கொண்டிருக்கிறன. உதாரணமாக: நில உரிமைகள் தொடர்பில் பார்த்தோமானால், யுத்த காலத்தில் நிலங்களை விட்டு வெளியேறும் நிர்பந்தங்களுக்கு ஆளாகின மக்கள் மற்றும் சந்தற்பங்களுக்கமைய வேறொருவரின் நிலத்தில் குடியமர்ந்த மக்கள் மற்றும் சட்டங்களுக்குமிடையிலான மோதல்கள் மூலமாக இனங்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சனைகள் தனிநபர்களை சார்ந்த அல்லது சட்ட நிர்வாகம் தொடர்பிலான பிரச்சனைகளாக இருந்தாலும் அதையே இனரீதியான முரண்பாடுகளாக சமூகம் தீர்மானிக்கும் நிலையொன்றும் அவ்வாறு தீர்மானித்ததற்கு பின்னரான முரண்பாடுகளும் நடந்துக்கொண்டிருக்கின்றன.

உதாரணமாக: நீண்ட நாளாக உரிமை கோரும் ஒருவர் இல்லாத நிலத்தை ஒரு பாதையாக பயன்படுத்தப்பட்டு தற்போது இரண்டு இனங்களை சேர்ந்த இருநபர் அந்த நிலத்திற்கு சொந்தம் கொண்டாட சென்ற பின்னர் அதுவே இரு சமூகங்களுக்குமிடையில் முரண்பாடுகள் உருவாக காரணமாக இருந்தன.

குறிப்பாக சில அரச உத்தியோகத்தர் மற்றும் அரசியல்வாதிகள் சேவைகளை வழங்கும்போது இனங்களின் அடிப்படையில் பணியாற்றுவதாலும் மக்களுக்கிடையில் முரண்பாடுகள் நடந்து அதுவே இனங்களுக்கு எதிராகவுமாக வளர்ந்துக்கொண்டிருக்கின்றது. மக்கள் தனக்கு கிடைக்காத சேவைகள் தொடர்பாகவோ அல்லது உரிமையை பெற்றுக்கொள்வதற்காக அல்லது அநீதிக்காகவோ குற்றவாளிகளுக்கு எதிராக போராடுவதை நிறுத்தி வெறுமனே இனங்களின் அடிப்படையில் மக்களுக்கிடையிலையே முரண்பாடுகளை மேற்கொள்கின்றனர். வெறுமனே மற்ற இனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்வதும், வார்த்தைகளால் முரண்பாடுகளை மேற்கொள்வதுமாக உள்ளன.

இதற்கு அப்பால், மதங்கள் சார்ந்த நிறுவனங்களினால் மதங்களின் அடிப்படையில் உருவாக்கும் பிரச்சினைகளினாலும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் நடக்கின்றன. உதாரணமாக, தீகவாப்பிய பிரதேசத்திலுள்ள ஒரு நிலத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்ட புத்தரின் சிலை தொடர்பாக நடந்த முரண்பாடுகளைச் சுட்டிக்காட்ட முடியும்.

காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஒரு வருடத்திற்கும் மேலாக நடாத்தப்படும் போராட்டத்திற்கான தீர்வேதும் கிடைக்காமல் இருப்பதும் இனங்களுக்கிடையிலான இடைவெளியை அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.

அத்துடன் வேறு இனத்தை சேர்ந்த மக்கள் வாழும் ஊரின் மாடொன்று இன்னுமொரு இனத்தை சேர்ந்த மக்கள் வாழும் ஒரு ஊருக்கு சென்றாலும்கூட அது இரண்டு ஊரை சேர்ந்த அல்லது இரண்டு குடும்பங்களை சேர்ந்த விடயமாக இல்லாமல் இரண்டு இனத்தை சார்ந்த விடயமாக கருதுவது காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறான பிரச்சனைகளால் முரண்பாடுகள் நடப்பது ஏன்? இன்னொரு இனத்தை சேர்ந்த நபரொருவரின் மாடு இன்னொரு ஊருக்கு சென்றால் அந்த மாட்டை கூட்டிக்கொண்டு வருவதற்கு மக்கள் அச்சப்படுகிறனர். . இவ்வாறான நிலையில் தான் நாம் நல்லிணக்கத்தை பற்றி உரையாடிக்கொண்டிருக்கின்றோம்.

வெறுமனே இரண்டு நபர்களுக்குமிடையிலான முரண்பாடுகளினால் இனங்களுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பினை காட்டுகின்றனர். இதை இரண்டு நபர்களுக்கிடையில் நடந்த விடயமாக கருதி அதை தனிப்பட்ட முறையில் தீர்பதற்கு பதிலாக நல்லிணக்கத்திற்காக பணிபுரியும் நபர்களும் இதை இனப் பிரச்சனையாக எடுத்துக்கொண்டால் ஒருபோதும் நல்லிணக்கமென்பது சாத்தியமாகுவதில்லை. ஆனால் தனிபட்ட ரீதியில் நடக்கும் பிரச்சினைகளை இனரீதியாக பார்த்து விடை சொல்லும் முகமாக சில திட்டங்கள் அமைந்திருப்பது காணக்கூடியதாக உள்ளது.

போருக்குப் பிந்திய இலங்கையில் சமூகங்களை கட்டி எழுப்புவதற்காக செயற்படும் சில செயற்பாடுகளின் மூலம் கூட இன முரண்பாடுகள் நடக்கிறதா என்பதை நோக்கவேண்டியதாக உள்ளது. செயற்பாட்டிற்காக இணைத்துக்கொள்ளப்படுகின்ற நபர்கள், உபயோகிக்கும் சொற்கள் போன்றவற்றால் கூட புதிய முரண்பாடுகள் ஏற்படக்கூடும். முக்கியமாக அமைப்புகளினால் திட்டங்களை செயற்படுத்துவதற்கு பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கும் உத்தியோகத்தர்கள் கூட அவர்களின் இனத்தை சேர்ந்த நபர்களுக்கு முக்கியதத்துவம் வழங்குவத்தின் காரணமாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் நடகின்றன என ஆய்வில் கண்டறியப்பட்டது.
ஆப்கனிஸ்தான், ஆஜன்டினா போன்ற நாடுகளில் சமாதானத்திற்கான திட்டங்களை பார்த்தோமானால், ஏதோவொரு நாடுகளில் போர் முடிந்த பின்னர் அல்லது அங்கே நடந்த முரண்பாடுகளுக்கு தீர்வாக அமைந்த சமாதானத்திற்கான திட்டங்களை இன்னொரு நாடுக்கு அல்லது சமூகத்திற்கு திணிக்கப்படுகின்றன. வேறு ஒரு நாட்டில் அல்லது வேறொரு சமூகங்களுக்கிடையில் நடந்த முரண்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட சமாதானத் திட்டங்கள் இன்னுமொரு நாட்டிற்கோ அல்லது சமூகத்திற்கோ இல்லையெனில் அவை முரண்பாட்டிற்கு தீர்வாக எப்படி அமையும்? ஏனெனில் ஒவ்வொரு முரண்பாடுகளுக்கும் அடிப்படையில் அந்த முரண்பாடுகளுக்கென செயற்பட்ட வித்தியாசமான கலாச்சாரம், சூழல், பொருளாதாரம் மற்றும் அரசியல் காணப்படும். வரலாற்றைப் பார்த்தோமானால், சமாதானத்திற்காக பயன்படுத்திய பல திட்டங்கள் அந்த முரண்பாட்டிற்கென வடிவமைக்கப்பட்ட தீர்வாக இல்லாமல்போனதே அந்த திட்டங்கள் தோல்வியடைய காரணமாக இருக்கின்றன.

அத்துடன் ஒவ்வொரு நாடுகளின் அடிப்படையில் கூட பார்த்தோமானால், ஒரே நாட்டில் நடந்த முரண்பாடுகளுக்கு வழங்கப்பட்ட தீர்வுகள் இன்னுமொரு முரண்பாட்டிற்கான தீர்வாக கருத முடியாது.

எல்லா சமூகங்களுக்குமிடையில் சமாதானத்தைக் கட்டி எழுப்புவதற்காக ஒவ்வொரு சமூகத்தையும் இணைத்து பயிர்களை நாட்டுவது, சுற்றுலா செல்வது மற்றும் மத ரீதியான நிகழ்வுகளின் பங்குபெறுவது, கலந்து கொள்வது மற்றும் ஏற்பாடு செய்வதுமாக அவ்வகையான திட்டங்களைக் குறிப்பிட முடியும். ஆனால், இவ்வகையான செயற்திட்டங்களை ஏற்பாடு செய்யும் உத்தியோகத்தர்களிடம் வினாவியபோது, அவர்களின் கருத்தானது இவ்வகையான பரிமாற்றங்களுடனான செயற்பாடுகளினால் சமாதானத்தை கட்டி எழுப்ப முடியும் என்பது.

பொது மக்களின் கருத்துகளுக்கமைய, தனிப்பட்டரீதியில் பொருளாதார நெருக்கடிகளுக்கு தினமும் அவர்கள் முகம்கொடுக்கிறார்கள் என்பதும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுப்பதே போராட்டமாக இருக்கையில் அதற்கான தீர்வுகள் என்னவென்றே தெரியாமல் இருப்பதும், யுத்தத்தினால் கிடைத்த அனுபவங்களும் ஏற்பட்ட தாக்கங்களினாலும் வெளியே வருவது கடினமானதாக இருப்பதாக சிலரின் கருத்தானது பதிவாகின. அது மற்ற இனத்தின் மீதான கோபங்களை காட்டுவதும், பிரச்சனைகளை உருவாக்கும் விதமாக அமையக் கூடாதெனவும் மக்கள் கருதுகின்றனர்.

நடந்த தாக்கங்களுக்கும், இழந்த சொந்தங்களுக்குமாக அவர்கள் ஒரு தீர்வினையோ அல்லது பதிலினையோ கேட்பது மக்களிடமிருந்து இல்லை எனவும் அது அரசினால் வழங்கப்பட வேண்டும் எனவும் அம் மக்கள் கருதுகின்றார்கள் என்பதும் ஆய்வின்போது தெரியவந்தது. இருப்பினும், இவ்வகையான பயிர்களை நாட்டுவது, சுற்றுலா செல்வது மற்றும் மத ரீதியான நிகழ்வுகளின் பங்குபெறுவது போன்ற செயற்பாடுகளும் சமாதானத்தை கட்டி எழுப்புவதற்கு முக்கியமெனவும் சில மக்கள் கருதுகின்றனர்.

தற்போது சமாதானத்திற்கான செயற்திட்டங்கள் பொருளாதாரரீதியில் மக்களை கட்டி எழுப்பும் விதமாகவும் அமைந்துள்ளன. அது முக்கியமென மக்களும் கருதுகின்றனர். ஆனால், சிலரின் கருத்தானது, 30 இலட்சம் செலவு செய்து போடும் காப்பெட் வீதியில் டயர் போட்டு எரித்தால் அது முறையற்றதென்பதாக உள்ளது. அபிவிருத்திக்காக இன முரண்பாடுகள் தாக்கமாக இருக்க கூடாதெனவும், அதேபோல் சமாதானத்திற்காக பயணம் அபிவிருத்திற்கான தாக்கமாகவும் அமையக்கூடாதென்பதுமாகும். தெளிவாக கூறினால் சமாதானமும், அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போலென மாக்கள் கருதுகிறார்கள்.

போருக்கு பின்னர் பல சர்வதேச அரச சாரா நிறுவனங்கள் வீட்டு திட்டங்களை அம்பாறைக்கு வழங்கி இருக்கிறார்கள். ஆனால், அதில் சில குறைபாடுகளும் இருப்பதென மக்கள் கூறுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் பணத்தொகைக்கு மட்டும் வீடொன்றை கட்ட முடியாதெனவும் வீட்டை கட்டும் அளவிற்கு காசு மக்களிடம் இல்லை எனவும் கூறப்பட்டது. ஆனால் கட்டிக்கொடுத்த வீடுகளும் அதில் மக்கள் நிம்மதியாக வாழ்வதும் காணக்கூடியதாக இருந்தது. இந்த வீட்டு திட்டங்களில் சிலது அரசு உதவியுடனும் நடந்திருக்கின்றன.

போர்காலத்தில் நடந்திருக்கும் பிரச்சினைகளுக்காக முறையான தீர்வொன்று கிடைத்திருக்கின்றதா? என்கிற கேள்வியை பார்த்தோமானால், விடைகளும் இன்றி முக்கியமாக நடந்த அநீதிகளுக்கான காரணிகளைக்கூட கண்டறியப்படாமல் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

சமாதானத்திற்கான செயற்திட்டங்களில் குறிப்பாக கல்வி, கலாசாரம் மற்றும் கலை ஊடாக ஒருமைப்பாட்டு தொடர்பான கதையை எடுத்து சென்றிருக்கின்றனர். அது மாணவர்கள் மற்றும் வயதுடையவரை இலக்காகக்கொண்டுள்ளது. எல்லா இனத்தை சேர்ந்த மக்களையும் இணைத்து பண்டிகைகளைக் கொண்டாடுவது, மதரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுவதுமாக ஏற்பாடுசெய்யப்பட்டு நடாத்தப்படுகின்றன. அது ஒவ்வொரு பிரதேசங்களிலும் நடாத்தப்பட்டிருன்கின்றன.

இவ்வகையான செயற்திட்டங்களில் இரண்டு அரசு மொழிகளையும் உபயோகிப்பது தொடர்பில் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் ஊடகங்களின் அறிக்கைகளைப் பார்கையில் சில பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் உபயோகிக்கும் வார்த்தைகளைப் பற்றி கூட அவர்களுக்கு எந்தவொரு பொறுப்புமில்லை என விளங்குகிறது. முக்கியமாக யாராவது பலவகையான திட்டங்களை சமாதானத்தை கட்டி எழுப்புவதற்காக நடாத்தினாலும், நிஜ உலகிலுள்ள சமாதானத்திற்கு எதிரான செயல்களை நிறுத்துவதே சமாதானத்திற்கான முதல் படியாக இருக்க வேண்டும்.

சமாதானத்திற்கான வேலைத் திட்டங்களில் சமாதானத்தை இல்லாமலளிக்கும் அல்லது இனங்களுக்கெதிராக முறைபாடுகளை சரியாக இனம்காண்பதே சமாதானத்திற்கான முக்கிய விடயமென கருதுகிறோம். அத்துடன், ஒருமைப்பாடு என்பது மனிதனின் உள்மனதை சேர்ந்த விடயமென்பதினால், ஒவ்வொருத்தருக்குமிடையில் புரிந்துணர்வு, மற்றும் அடையாளங்களை இனங்காண்பது கிராமங்களில் அடிப்படையில் நடாத்தப்பட வேண்டும்

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More