புதுடெல்லியில் நடந்துவரும் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கிண்ணப் போட்டிக்கு பாகிஸ்தான் வீரர்கள் இருவருக்கு இந்தியா விசா வழங்க மறுத்ததையடுத்து இந்தியாவில் எதிர்காலத்தில் எந்தவிதமான சர்வதேசப் போட்டிகள் நடத்த தடை விதித்தும், போட்டிகள் நடத்துவது தொடர்பான அனைத்து ஆலோசனைகளை ரத்து செய்தும் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் புதுடெல்லியில் நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கிண்ணப் போட்டியில் 25 எம் ரேபிட் துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் அந்தஸ்தினையும்; ரத்து செய்துள்ளது.
புல்வாமாவில் தீவிரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புதுடெல்லியில் நடந்து வரும் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பைப் போட்டியல் பங்கேற்க பாகிஸ்தானைச் சேர்ந்த இரு வீரர்கள் விசாவுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில் அவர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இது தொடர்பாக பாகிஸ்தான் ஐஓசியிடம் அளித்த முறைப்பாட்டியைனடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் எந்தவிதமான தடையும் வீரர்களுக்கு ஏற்படுத்த மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக இந்தியா உறுதியளிக்காதவரை, இந்தியாவில் ஒலிம்பிக் தொடர்பான எந்தவிதமான போட்டிகளும் நடத்த அனுமதிக்க முடியாது என ஐஓசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.