புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் மூன்று நதிகளின் நீரைத் தடுத்து நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 200 சதவிகிதம் சுங்கவரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டதுடன் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த வர்த்தக ரீதியான சலுகைகளை ரத்து செய்துள்ளது. மேலும் கலாச்சார நிகழ்ச்சிகள், கிரிக்கெட் ஆகியவற்றிலிருந்து பாகிஸ்தானை ஒதுக்கும் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசு, இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலிருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் மூன்று நதிகளின் நீரைத் தடுத்து நிறுத்த முடிவெடுத்துள்ளதாகத் தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்குச் செல்லும் ரவி, சட்லஜ் மற்றும் பீஸ் நதிகளின் நீரோட்டங்கள் ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மக்கள் பயன் பெறும் வகையில் திருப்பிவிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.