பிரித்தானியாவுக்கான இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் உரிய கரிசனையுடன் செயற்பட்டு வருவதாக ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் அறிவித்துள்ளார்.
பிரித்தானிய பாராளுமன்றத்தில், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, இலங்கை சென்ற விடயம் தொடர்பாக வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான இராஜாங்கச் செயலரிடம், அவரது திணைக்களத்தின் பங்கு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் மோர்கன், கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட், கடந்த ஆண்டு இலங்கைத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் தொடர்புபட்டிருந்த சம்பவம் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் ஆழ்ந்த கரிசனையுடன் செயற்பட்டது. உடனடியாக இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றது.
2018 பெப்ரவரி 8ஆம் திகதி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடி, பிரித்தானியாவின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டது. குறிப்பிட்ட சம்பவம் நடந்து போது, பிரித்தானியாவில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் இராஜதந்திர நிலை தொடர்பாக நீதிமன்றம் கேட்ட விளக்கத்துக்கு தேவையான ஆவணங்களை அளித்து உதவியது. எதிர்காலத்தில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் விடயத்தில் பிரித்தானியா விசேட கரிசனையுடன் செயற்படும் என, ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் கூட்டிக்காட்டியுள்ளார்.