இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை கண்டித்து மகஜர்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை கண்டித்தும் , ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி ஜனாதிபதி, பிரதமர் , காவல்துறை மா அதிபர் உள்ளிட்டோரிடம் யாழ்.ஊடக அமையம் கோரிக்கை விடுத்து மகஜர் அனுப்பி வைத்துள்ளது.

குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யுத்த நெருக்கடி மிக்க காலப்பகுதிகளில் வட கிழக்கு தமிழர் தாயக்கப்பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஊடக அடக்குமுறைகளால் 39 வரையிலான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டிருந்தமை அறிந்ததே.  அதனை விட பல மடங்கு ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டும் தப்பியோடியுமிருந்தனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னராக அச்சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்ட போதும், தற்போதைய சம்பவங்கள் அதன் உண்மைத்தன்மையினை கேள்விக்குள்ளாக்கியே வருகின்றது.

ஏற்கனவே முல்லைதீவில் ஊடகவியலாளர்களான ச.தவசீலன் மற்றும் எஸ்.குமணன் ஆகிய இருவரும் படையினரது பகிரங்க அச்சுறுத்தல்களிற்கு அண்மையில் உள்ளாகியிருந்தமை தொடர்பில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் கிளிநொச்சியில் கடந்த 25ம் திகதி திங்கட்கிழமை(25.02.2019) பகிரங்க வெளியில் ஊடகவியலாளர்களிற்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் மற்றும் அவர்களது பணியிற்கு விளைவிக்கப்பட்ட குந்தகம் தொடர்பில் யாழ்.ஊடக அமையம் மிகுந்த மனவருத்தத்துடன் தனது கண்டனத்தை பதிவு செய்ய விரும்புகின்றது.

தமிழரசுக்கட்சியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினரென அடையாளப்படுத்தப்பட்ட நபரொருவரும் அவருடன் வந்திருந்த கும்பலொன்றும் ஊடகவியலாளர்களிற்கு பொது வெளியில் அதுவும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் விடுத்த கொலை அச்சுறுத்தல் என்பது புறந்தள்ள முடியாததொன்று.

மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமொன்று தொடர்பில் அறிக்கையிட வருகை தந்திருந்த யாழ்ப்பாணம், முல்லைதீவு மற்றுமு் கிளிநொச்சி ஊடகவியலாளர்களிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதிலும் ஊடகவியலாளர்களை கிளிநொச்சியினை தாண்டி செல்ல முடியாதென கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளமையுடன் ஊடகவியலாளர்களை புகைப்படம் பிடித்து ஆவணப்படுத்தியுள்ளமை ஊடகவியலாளர்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

அத்துடன் குறித்த கும்பலால் எடுக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் புகைப்படங்களை அக்கும்பலை சேர்ந்தவர்கள் தமது முகநுலில் பதிவேற்றி அடையாளம் காண உதவுமாறு பகிரங்கமான அறிவித்தலை விடுத்துள்ளனர்.

கடந்த காலங்களில் அவ்வாறு புகைப்படம் பிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்படுவதும் தாக்கப்படுவதும் வழமையாக நடந்து வந்த சம்பவங்களே.

தற்போதைய சூழலில் கொலை அச்சறுத்தலையடுத்து தமது தொழில் நிமித்தமோ அல்லது தனிப்பட்ட தேவையின் நிமித்தமோ ஊடகவியலாளர்கள் கிளிநொச்சி செல்ல அச்சங்கொண்டுள்ளனர்.

கடந்த ஆட்சி காலங்களில் நடந்தது போன்று தாங்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோ அல்லது கொல்லப்படலாமென்றோ அச்சம் அவர்களிடையே எழுந்துள்ளது.

இன்னொரு புறம் வழமை போலவே ஊடகவியலாளர்களிற்கு அரசியல் சாயம் பூசும் நடவடிக்கைகளிலும் இத்தரப்புக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இத்தகைய சூழலில் ஊடகவியலாளர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தவும் கோரி நிற்கின்றோம்.

இதன் மூலம் தமக்கு நீதி கோரி ஊடகவியலாளர்கள் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியுமென நம்புகின்றோம்.
அதேவேளை குற்றவாளிகளை அடையாளப்படுத்த பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தயராக உள்ளார்கள் என்பதையும் அறியத்தர விரும்புகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.