நில உரிமை இன்றி சட்ட விரோதமாக காடுகளில் வசித்து வரும் பழங்குடியினரை வெளியேற்ற தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் நேற்றையதினம் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 13ம் திகதி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.
மாநில அரசுகளால் பட்டா உள்ளிட்ட நில உரிமை மறுக்கப்பட்ட பிறகும், சட்ட விரோதமாக காடுகளில் வசித்து வரும் பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய காட்டுவாசிகளை வெளியேற்றுமாறு கடந்த மாதம் 13ம் திகதி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் அவர்களை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறும் 21 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்றின் இந்த உத்தரவால் இந்தியா முழுவதும் சுமார் 11.80 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்ட இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய காட்டுவாசிகள் சட்டம்-2006’ ஒரு பயனுள்ள சட்டமாகும். காடுவாழ் மக்கள் மிகவும் ஏழைகள் மட்டுமின்றி கல்வியறிவற்றவர்கள் ஆவர். இந்த சட்டத்தின் கீழ் அவர்களுக்கு கிடைக்கும் உரிமைகள் குறித்து அவர்கள் தெரிந்திருக்கவில்லை. எனவே அவர்களின் நன்மைக்காக இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு கூறி இருந்தது.
இந்த மனு மீது நேற்றையதினம் விசாரணை இடம்பெற்ற நிலையில் பட்டா இன்றி காடுகளில் வசித்து வரும் பழங்குடிகள் மற்றும் காட்டுவாசிகளை வெளியேற்ற தடை விதித்த நீதிபதிகள் கடந்த மாதம் 13ம் திகதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.