வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெற்ற வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இருவரும் வியட்நாம் அரசு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் பங்கேற்றிருந்த பின்னர் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காலை மீண்டும் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பில் அணு ஆயுதத்தை முழுமையாகக் கைவிடுவது மற்றும் பொருளாதார தடைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இருதரப்புக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது.
தன் மீதான பொருளாதார தடையை முழுமையாக நீக்க வேண்டும் என வடகொரியா முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்ததையடுத்து 2–வது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.