Home இலங்கைமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலை இயங்கவில்லை – நோயாளர்கள் அசௌகரியம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலை இயங்கவில்லை – நோயாளர்கள் அசௌகரியம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக சிற்றுண்டிச்சாலை இயங்காத காரணத்தினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக வைத்தியசாலை விடுதிகளில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் உட்பட அனைவரும் உணவு மற்றும் சுடு நீர் போன்றவற்றினை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வட மாகாண சபையினால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள அம்மாச்சி உணவகத்திற்கு வைத்தியசாலை வளாகத்தினூடாக செல்ல கடமையில் உள்ள பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அனுமதிப்பதில்லை என்பதனால் வெளியில் சென்றே தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் ‘சுடு நீரை’ பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஒஸ்மன் டெனியிடம் வினவிய போது,,,,

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்,ஏற்கனவே காணப்பட்ட சிற்றுண்டிச்சாலையின் கட்டிடம் முழுமையாக அகற்றும் நிலையில் உள்ளது. வைத்தியசாலையுடன் எவ்வித ஒப்பந்தமும் செய்யாது வைத்தியசாலை வளாகத்தில் உள்ள அம்மாச்சி உணவகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

குறித்த அம்மாச்சி உணவகம் காணப்படும் கட்டிடத்தை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஒரு மாதத்தினுள் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More