கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்கு நாட்டுப்படகுகளில் செல்வது தொடர்பாகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்கு நாட்டுப்படகுகளில் மீனவர்களை அனுமதிக்க வேண்டுமென்று கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்தவழக்கு தொடர்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற விசாரணையின்போது, அடுத்த ஆண்டு முதல் ஆலயத் திருவிழாவுக்கு மோட்டார் பொருத்திய நாட்டுப்படகில் செல்ல அனுமதி வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவுக்கு மோட்டார் பொருத்திய நாட்டுப்படகில் செல்ல அதிகாரிகள் அனுமதி மறுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை நேற்றையதினம் நடைபெற்ற நிலையில் மனு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை விளக்கமளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை மார்ச் 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.