Home இலங்கை இறங்குமுகம் – பி.மாணிக்கவாசகம்

இறங்குமுகம் – பி.மாணிக்கவாசகம்

by admin
அரசியல் உரிமைக்கான தமிழ் மக்களின் போராட்டம் ஒரு சந்தியில் வந்து தேக்க நிலையை அடைந்துள்ளது. ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகத் தொடர்ந்த ஓர் அரசியல் போராட்டத்தின் இந்த நிலைமை கவலைக்குரியது.
பல வடிவங்களில் பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ள இந்தப் போராட்டத்தைப் பலதரப்பட்ட தலைவர்கள், பல்வேறு நிலைகளில் பல்வேறு வழிமுறைகளில் வழிநடத்தியிருக்கின்றார்கள். அந்த வழிநடத்தல்களும்சரி, முன்னேற்றமும்சரி,  போராட்டத்தின் இலக்கை நோக்கித் தொடர்ந்து பயணிப்பதற்கு உற்சாகமூட்டுவதாக அமையவில்லை.
போராட்ட வடிவங்கள் மாறலாம். போராட்டத்தின் இலக்கு மாறவில்லை. கொள்கையில் மாற்றமில்லை என்ற போராட்டத்தின் இருப்பு குறித்த இறுமாப்பான குரல்கள் காலத்துக்குக் காலம் ஒலித்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் போராட்டத்தின் இலக்கிற்கு அவசியமான  தெளிவான, ஒன்றிணைந்த கொள்கை ரீதியான ஐக்கியப்பட்ட நிலைப்பாடு என்பது கேள்விக்குரியதாகவே இருந்து வந்துள்ளது – இருந்து வருகின்றது.
போராட்டத்துக்கான கொள்கை நிலைகளில் காலத்துக்குக்கேற்ற மாற்றம் அவசியம் என்ற உண்மை பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு கசப்பான அனுபவங்களின் மூலம் உணர்த்தப்பட்டிருக்கின்றது. இருப்பினும் கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன் தோன்றியவன் தமிழன் என்று பெருமை பேசி, பழைமையில் ஊறித்திளைக்கின்ற போக்கில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆளுக்கொரு நிலைப்பாடு, ஆளுக்கொரு கோலம் என்ற போக்கும், அந்த அரசியல் பிடிவாதமும் இந்து ஆலயங்களின் நவக்கிரக நிலைமையை  ஒத்ததாகவே இருக்கின்றது.
போராட்டத்தின் இலக்கை நோக்கிய பயணத்தில் கால மாற்றத்திற்கும் அரசியல் யதார்த்த நிலைமைகளுக்கும் உகந்த முறையில் கொள்கைகள் பலதரப்பினராலும் ஒன்றிணைந்து பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டதில்லை. அத்தகைய பரிசீலனையின் அடிப்படையில் போராட்டம் பலதரப்பினராலும் ஒரு முகமாக முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த முன்னெடுப்பிற்கான முயற்சிகள் சிறிய அளவிலேயே மேற்கொள்ளப்பட்டன என்பதும், அந்த முயற்சியின் மூலம் உருவாக்கப்பட்ட ஐக்கியப்பட்ட நிலைமையும் குறுகிய காலத்திலேயே அற்றுப் போய்விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுய அரசியல் இலாபம், கட்சி அரசியல் நன்மைகள் என்ற எல்லைகளைக் கடந்து திறந்த மனதோடு உரிமைப் போராட்டத்தின் பங்காளர்களினால், இந்த மீள் பரிசீலனை காலத்துக்குக் காலதம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட வரலாற்றைக் காண முடியவில்லை. ஓரிரு சந்தர்ப்பங்களில் இந்த ஒற்றுமை உருவாக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது. தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போன்ற கூட்டு இணைவுகள் சாத்தியமாகியிருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் அவற்றின் செயல் வடிவ விளைவுகளும், தொடர்ச்சியும் கவலைக்குரிய நிலைமையையே பிரதிபலித்திருக்கின்றன.
போராட்டத்தின் இலக்கு ஒரே இலக்காகத் தோற்றமளிக்கலாம். ஆனால், போராட்டத்தை முன்னெடுப்பதற்கான தலைமைத்துவத்தை ஏற்றுள்ள பலரும், ஆளுக்கொரு கொள்கை, காலத்துக்கு ஏற்ற கோலம் என்ற போக்கில் பயணித்திருப்பதையே காண முடிகின்றது. அந்தப் பயணம் எல்லையற்றதாகத் தொடர்ந்து கொண்டிருப்பது தமிழ் அரசியலின் மோசமான சோகநிலை என்றே கூற வேண்டும்.
பேரினத்தவராகிய சிங்கள மக்களுடன் சரி சமத்துவமாக, இந்த நாட்டின் குடிமக்கள் என்ற உயரிய அந்தஸ்துடன் வாழ வேண்டும். அதற்கான உரிமைகள் இருக்க வேண்டும். அந்த உரிமைகள் அரசியல், சமூக, பொருளாதார, சமய, கலை, கலாசார விழுமிய நிலைகளில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அந்த உறுதிப்பாடு கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாததாக இருக்க வேண்டும். மறுத்துரைத்து ஒடுக்கப்படுவதற்கும், அதிகார நிலைகளில் மீளப் பெறப்படுவதற்கும் இடமளிக்க முடியாததாக அமைந்திருக்க வேண்டும் என்பதே – அந்த சரி சமனான உரிமை கோரிக்கையின் அடிப்படையாகும்.
இத்தகைய அடிப்படையைக் கொண்ட உரிமைப் போராட்டம், பேச்சுவார்த்தைகள், சாத்வீகப் போராட்டம், ஒத்துழையாமைப் போராட்டம், அடக்குமுறைக்கு எதிரான போராட்டம், அடக்குமுறையில் இருந்து பாதுகாத்துக் கொண்டு போராட வேண்டும் என்ற அடிப்படையிலான ஆயுதப் போராட்டம் என்று பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது.
இந்த படிநிலைகளில் பேரின மக்களுடன் இணைந்து வாழ்வதற்கான விருப்பு, அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளினால், தகர்க்கப்பட்டது. அதுவே, தனிநாட்டுக் கோரிக்கை நிலைப்பாட்டை நோக்கித் தமிழர்களை உந்தித்தள்ளியது. ஆயுதப் போராட்டம் அந்தத் தனிநாட்டுக் கோரிக்கையில் அசைக்க முடியாத கொள்கைப் பிடிப்பைப் பிரதிபலித்திருந்தது.
சிறுபான்மை இன மக்கள் மீது அடக்குமுறையை நிரந்தரமான அரசியல் அணுகுமுறையாகக் கொண்டிருந்த ஆட்சியாளர்களை இந்த ஆயுதப் போராட்டம் ஆட்டம் காணவும், அஞ்சி ஒடுங்கவும் செய்திருந்தது. ஆனால், அரசியல் ரீதியான மனநிலை மாற்றத்தை நோக்கி அவர்களை உந்தித்தள்ளச் செய்வதற்கு அந்த அழுத்தம் உதவவில்லை.
மாறாக ஆயுதப் போராட்டம் என்ற அந்த அரசியல் அழுத்தத்தை, சர்வதேச ஒழுங்கமைவுக்கு உகந்ததாக மாற்றி, பயங்கரவாதமாகச் சித்தரித்து, அதனை அதிகூடிய இராணுவ பலத்தின் மூலம், அடித்து நொறுக்குவதற்கே பேரினவாத ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இது அவர்களுடைய குள்ளநரித்தனமான அரசியல் உத்தியாக வெளிப்பட்டிருந்தது.
ஐக்கியப்பட முடியவில்லை
தாயக மண் உரித்துடன் கூடிய உறுதியான, நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வை எட்ட வேண்டும் என்பது தமிழர் தரப்பு அரசியலின் அசைக்க முடியாத இலக்கு.
எதிர்ப்பு அரசியல் போக்கைக் கடைப்பிடித்தவர்களாயினும்சரி, இணக்க அரசியலைக் கடைப்பிடித்தவர்களாயினும்சரி, அபிவிருத்தி அரசியலைக் கொண்டிருந்தவர்களாயினும்சரி, அனைத்துத் தரப்பினருக்கும் இதுவே பொதுவானதோர் அரசியல் இலக்காக இருந்தது. காலங்கள் கரைந்துள்ள போதிலும், அந்த இலக்கை நோக்கிய நிலையில் அவர்களிடம் மாற்றம் இல்லை என்றே கூற வேண்டும்.
தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதே பொதுவான அரசியல் குறிக்கோளாக இருந்த போதிலும், அதற்கான கொள்கை வழிப்போக்கில், இந்த மாறுபட்ட நிலைகளில் உள்ள தமிழ் அரசியல் சக்திகள் ஏன் ஒன்றிணைய முடியவில்லை, ஐக்கியப்பட முடியவில்லை என்பது விடை காண முடியாத வினாவாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
மிதவாத தமிழ் அரசியல் கட்சிகளே தமிழர் விடுதலைக் கூட்டணியாக ஒன்றிணைந்து, தனிநாட்டைத் தவிர வேறு வழியில்லை என்ற அரசியல் தீர்மானத்திற்கு வந்திருந்தன. தேசிய கட்சிகளின் நிழலில் அரசியல் முன்னெடுப்புக்களைக் கொண்டிருந்தவர்களும்கூட, அடிமனதில் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவானவர்களாகவே இருந்தார்கள்.
மிதவாத அரசியல் சக்திகளின் தனிநாட்டுக் கோரிக்கை தீர்மானத்தைச் செயற்படுத்துவதற்காக ஆயுதமேந்திப் போராடிய இளைஞர் சக்திகளும்கூட, தமக்குள் ஐக்கியப்பட்டு தொடர்ச்சியாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. சகோதரப் படுகொலைகள் என்ற அரசியல் சாபக்கேட்டு நிலைமைக்கு ஆயுதமேந்தியிருந்த இளைஞர் அமைப்புக்கள் ஆளாகிப் போயின. அந்த நிலைமை தமிழ் அரசியல் போராட்டத்தின் பிரதான மனித வலுவாகிய இளைஞர் சக்தியை மலினப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் மோசமான பலவீனத்தை நோக்கியே தமிழ் அரசியலை நகர்த்தியிருந்தது. தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்ட வரலாற்றில் கசப்பான சாபக்ககேடாகவே அந்த சகோதரப் படுகொலை அரசியல் நிலைமை பதிவாகியிருக்கின்றது.
ஆயுதப் போராட்ட காலத்தில் தங்களுக்கிடையில் திம்பு பேச்சுவார்த்தைகளின்போது ஐக்கியப்பட்டிருந்த ஆயுதமேந்திய அமைப்புக்கள் தொடர்ச்சியாகத் தமது போராட்டச் செயற்பாடுகளை ஒற்றுமையாக முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. ஆயுதப்போராட்டத்தின்போது அவ்வப்போது, குறிப்பாக யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த இராணுவம், மக்கள் குடியிருப்புக்களை நோக்கி ஷெல் தாக்குதல்களை நடத்திய தருணங்ளில் அந்த அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டிருந்த போதிலும், அரச படைகளுக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ச்சியாக ஒன்றணைந்து தமது போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியவில்லை.
இந்திய அமைதி காக்கும் படையினரின் வருகையையடுத்து, ஆயுத மேந்திய அமைப்புக்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பின. விடுதலைப்புலிகள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும், ஏனைய அமைப்புக்கள் ஜனநாயக வழிமுறையிலான தமது அரசியல் பயணத்தைத் தொடர்ந்த போதிலும், அவைகள் இறுக்கமான ஓர் ஐக்கியப்பட்ட வழிநின்று தொடர்ச்சியாகச் செயற்பட முடியவில்லை.
தயக்கத்திற்குரியதோ தலைமை. . . . .?
தமிழர் விடுதலைக் கூட்டணிக்குப் பின்னர், உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலும், முன்னர் ஆயுதமேந்திப் போராடிய அனைத்து அமைப்புக்களும் அந்த கூட்டமைப்பில் இணைந்து செயற்பட முடியவில்லை.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், தமிழர் தரப்பின் முக்கிய அரசியல் தலைமையாகத் துளிர்விட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பும், யுத்தத்தினால் பாதிக்கப்பட் மக்களின் மீள் எழுச்சிக்கு அவசியமான அடிப்படைத் தேவைகளை அடிநாதமாகக் கொண்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் வெற்றிகரமாகச் செயற்பட முடியவில்லை. இதனால் மாற்றுத் தலைமை குறித்த சிந்தனைக்கான நிர்ப்பந்தமான நிலையிலும், ஜனநாயக வழிக்குத் திரும்பியிருந்த முன்னாள் ஆயுதக் குழுக்களாகிய அமைப்புக்களினால் ஒன்றிணைந்ததோர் அரசியல் தலைமையை உருவாக்குவதில் வல்லமை குறைந்தவைகளாகவே காணப்படுகின்றன.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்தபின் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிஆர்எல்எவ், தமிழர் விடுதலைக்கூட்டணி போன்ற கட்சிகளும், தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இணையாமல் வெளியில் இருந்து ஆரம்பகாலம் தொட்டுச் செயற்பட்டு வந்த ஈபிடிபி உள்ளிட்ட ஏனைய கட்சிகளும்கூட தங்களுக்குள் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கென ஒன்றிணைந்ததோர் அரசியல் அமைப்பை உருவாக்க முடியவில்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குத் தலைமை ஏற்றுள்ள தமிழரசுக் கட்சி தனது கட்சி நலன்களைப் பேணுவதிலும், அந்தக் கட்சியை மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வளர்த்தெடுப்பதிலும் கூடிய சிரத்தையெடுத்துச் செயற்படுகின்றதோர் அரசியல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது. இந்த கட்சிசார்ந்த சுயநலப் போக்கே கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்ல காரணமாகியது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து வலுவானதோர் அரசியல் பிரதிநிதித்துவத்துக்குரிய சக்தியாகக் கட்டியெழுப்புவதற்குத் தமிழரசுக்கட்சி தவறிவிட்டது. இதனாலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற தமிழ் மக்களின் அரசியல் வலிமை பலவீனமான நிலைமைக்கு ஆளாகியது.
அங்கத்துவக்கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்கி உள்ளக ஜனநாயகப் பண்பை மேம்படுத்தி, கூட்டமைப்பை வலுவானதோர் அரசியல் தலைமையாகக் கட்டியெழுப்புவதற்குத் தமிழரசுக் கட்சியினால் முடியாமல் போய்விட்டது. அரச மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் சக்தி வாய்ந்ததோர் அரசியல் அமைப்பாகக் கருதப்பட்ட போதிலும், கூட்டமைப்பின் உட்கட்டமைப்பும், உள்ளகச் செயற்பாடுகளும் அவ்வாறு அமையவில்லை என்பதே கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றுள்ளவர்களினதும், கூட்டமைப்பின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தவர்களினதும் கருத்தாகும்.
கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குக் காலத்துக்குக் காலம் உரிய அணுகுமுறைகளைப் பின்பற்றி, பங்காளிக் கட்சிகளின் ஏகோபித்த ஆதரவுடன் சரியான நிலைப்பாட்டில் காரியங்களை முன்னெடுக்காமல் அதன் தலைமை நிலையில் உள்ள தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக முடிவெடுத்துச் செயற்படுகின்றது என்ற அதிருப்தியும் இந்த நிலைமைக்குத் துணைசெய்திருந்தது.
குறிப்பாக 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் கால வாக்குறுதிகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை கடைப்பிடிக்கத் தவறியது நிறைவேற்ற முயற்சிக்கவில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டும் கூட்டமைப்புத் தலைமையின் மீது சுமத்தப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களின் நலன்களிலும் பார்க்க தேர்தலில் வெற்றிபெற்று அரசியல் செல்வாக்கைப் பேண வேண்டும் என்ற சுயநலப்போக்கில் கூட்டமைப்பின் தலைமை அதிக கவனம் செலுத்துகின்றது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
நிலைமைகள்
சாத்வீகப் போராட்ட வழிசென்ற தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அரச அடக்குமுறைகள், அடாவடித்தனங்களில் இருந்து அவர்களைக் காத்து, அரசியல் போராட்டத்தை வலிமை மிக்கதாக முன்னெடுப்பதற்காகவே தனிநாட்டுக் கோரிக்கையை வரித்துக்கொண்ட ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தைப் பேச்சுவார்த்தைகளின் மூலம் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்திய அரசாங்கத்தின் முன்னெடுப்பில் 1985 ஆம் ஆண்டு ஜுலை ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு அமர்வுகளாக பூட்டான் நாட்டுத் தலைநகராகிய திம்புவில் அரசியல் தீர்வுக்கான முதலாவது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அது தோல்வியில் முடிந்த பின்னர், 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஓப்பந்தம் செய்யப்பட்டு மாகாணசபை முறைமையின் கீழ் அரசியல் தீர்வுக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதுவும் தோல்வியடைந்து, ஆயத மோதல்கள் தீவிரமடைந்திருந்த ஒரு பின்னணியில் 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் செய்யப்பட்டு, நோர்வே நாட்டின் மத்தியஸ்தத்துடன் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்தப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்ததையடுத்து, யுத்தம் புதிய வேகத்துடன் மூண்டது.
தமிழர்களின் வீரம், செயல் வல்லமை மிகுந்த துணிவு, நவீன காலத்துப் போர்க்கள வியூகப் பயன்பாட்டுத் திறமை, ஒப்பற்ற யுத்தமுனைத் தியாகம், அதற்குச் சற்றும் சளைக்காத அஹிம்சை வழியிலான (திலீபனின்) உண்ணாவிரதப் போராட்டத் தியாகம், கொண்ட கொள்கை மீதான இறுக்கமான பிடிப்பு, கொள்கையில் விட்டுக்கொடுக்காத தன்மை போன்ற பல்வேறு குணநலன்களும், பண்புகளையும் தமிழ் மக்களின் முப்பது வருடகால ஆயுதப் போராட்டம் அரங்கேற்றியிருந்தது.
ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமையில் மிகத் தீவிரம் பெற்றிருந்த தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம், நேர்த்தியானதோர் சட்டம் ஒழுங்கு நீதித்துறை என்பவற்றை முக்கியமாக உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகச் செயற்பாடு, மக்கள் நலன்சார்ந்த பொருண்மிய கொள்கை போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதோர் நிழல் அரசாங்கத்தின் பரீட்சார்த்த களமாக வன்னிப்பிரதேசம் திகழ்ந்தது. அந்தப் போராட்டம் நல்ல கதை முடிவு சரியில்லை என்ற விமர்சன ரீதியிலான முடிவை 2009 ஆம் ஆண்டு எட்டியது.
யுத்தத்திற்குப் பின்னரான பத்து வருட காலத்திலும் இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு காணப்படவில்லை. அதற்கான பேச்சுவார்த்தைகளோ அல்லது அதனையொட்டிய தீவிரமான முயற்சிகளோ மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால் யுத்தத்தில் வெற்றி பெற்ற அரசாங்கத்தின் போக்கில் ஏற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச அதிருப்தி நிலை காரணமாக யுத்தம் முடிவுக்கு வந்த 9 ஆண்டுகளின் பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற ஆணையின் அடிப்படையில் உருவாகிய புதிய ஆட்சியில் பல்வேறு மாற்றங்களுக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
நல்லாட்சி அரசாங்கம் என்றழைக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் நான்கு வருடச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ அல்லது,
யுத்தகாலத்து உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்ற ஐநா மற்றும் சர்வதேசத்தி;ன் அழுத்தத்தையொட்டிய நிலைமாற்றுக்கால நீதியை நிலைநாட்டுவதற்குரிய நடவடிக்கைகளும் முறையாக அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்படவில்லை.
இணை அனுசரணை வழங்கி நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கான பொறிமுறைகளை உருவாக்கிச் செயற்படப் போவதாக அளித்த உறுதிமொழிகளைக் காற்றில் கரைப்பதற்கான முயற்சிகளிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.
பொறுப்பு கூறுகின்ற கடமைகளை நிறைவேற்றுவதற்கான கால எல்லையைக் காலத்துக்குக் காலம் நீடித்துக் கொள்வதில் காட்டப்படுகின்ற அக்கறையையும், ஆர்வத்தையும் நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுகின்ற செயற்பாடுகளில் அரசு காட்டவில்லை. இழுத்தடித்து ஏமாற்றுகின்ற ஒரு போக்கைக் கடைப்பிடிப்பதிலேயே அது குறியாக இருக்கின்றது.
இதனால், பொறுப்பு கூறுகின்ற கடமைக்குரிய செயற்பாடுகளுடன் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்கின்ற கடப்பாடும்கூட கானல் நீராகின்ற நிலைமையை நோக்கியே நகர்ந்துள்ளது.
மொத்தத்தில் தனிநாட்டுக்கான கோரிக்கை ஆயுதப் போராட்;டம் முடிவுக்கு வந்ததுடன் கோஷத்துடன் முடிவுற்றதைப் போலவே, யுத்தத்தின் பின்னரான வடக்கு கிழக்கு இணைப்பு, பகிரப்பட்ட இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வும் தேர்தல் கால கோஷத்துடன் தொங்கிக் கொண்டிருக்கின்றது.
தனிநாடு சாத்தியமில்லை. வடகிழக்கு தாயகக் கோட்பாடும் சாத்தியமில்லை. பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமை சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி ஆட்சி முறைமையும் ஏக்கிய ராஜ்ஜிய – ஒருமித்த நாடு என்ற, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அரசியல் தீர்வுப் பிரசாரப் பொறிக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கின்றது.
இந்த பின்னணியிலேயே தமிழ் மக்களின் சம அரசியல் உரிமைக்கான கோரிக்கையும் அரசியல் போராட்டங்களும் இறங்குமுக நோக்கில் சரிந்து வந்து சந்தியில் விறைத்து நிற்கின்ற ஒரு நிலைமையை எட்டியுள்ளது.
இந்தத் தேக்க நிலையில் இருந்து தமிழ் மக்கள் எவ்வாறு மீளப் போகின்றார்கள்? விறைப்ப நிலையை எட்டியுள்ள அரசியல் உரிமைக்கான போராட்டம் எந்த வகையில் உயிர்ப்படையப் போகின்றது?
இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கப் போவது யார் என்பது தெரியவில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More