பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தில் நிலவிய போர் வாழ்க்கையை நினைவுபடுத்துகின்றன காஷ்மீர் பதுங்குகுழிகள். ஈழத்தைப் போலவே செல்கள், துப்பாக்கிச் சன்னங்களை வைத்து விளையாடும் குழந்தைகளையும் சிறுவர்களையும் இன்றைய காஷ்மீரில் காணுகிறோம். போரின் கொடுமையான வாழ்ககையை அனுபவித்தவர்கள் என்ற முறையிலும், போரில் மீந்த குழந்தைகளை கொண்டிருப்பவர்கள் என்ற முறையிலும் காஷ்மீர் மக்களின் வாழ்வும் குரலும் நெருக்கத்தையும் கலக்கத்தையும் தருகின்றது. பிபிசிக்காக திவ்வியா ஆர்யா எழுதிய இப் பத்தியை குளோபல் தமிழ் செய்திகள் நன்றியுடன் பிரசுரிக்கின்றது. -ஆசிரியர்
படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMESImage caption
அவள் மெதுவாக எனது பாதுகாப்புச் சட்டையை தொட்டுப்பார்த்தாள். பின்பு அவள் தனது கையை என்னிடம் விரித்துக்காட்டி இங்கே பாருங்கள் என்றாள். அவளது பிஞ்சு கைக்குள் பாகிஸ்தானில் இருந்து வந்த ஷெல் குண்டின் உடைந்த பகுதி இருக்கிறது.
கருப்பு நிறத்தில் துர்நாற்றம் வீசும் அந்த இரும்புத் துண்டை வெற்றிப்பதக்கமாக கருதுகிறாள். அவளது முகத்தில் ஒரு சிரிப்பு இருந்தது. ஏனெனில் இன்று அவளிடம் ஷெல்லின் உடைந்த பகுதிகள் நிறைய இருக்கின்றன. மற்ற குழந்தைகளை விட அதிக ஷெல் குண்டு பொறுக்கும் விளையாட்டில் தான் வெற்றிபெற்றுவிடுவோம் என அவள் நம்பினாள்.
நான் அவளிடம் அதைத் தூக்கி எறிந்துவிட்டு சோப் மூலம் கை கழுவுமாறு கூறினேன். ஷெல் குண்டின் இந்தச் சிறிய பாகங்கள் ரசாயன வாயுக்களை உருவாக்கும் அவை மிகவும் தீங்கிழைக்கக் கூடியவை என ஒரு காவல்துறை அதிகாரி என்னிடம் கூறினார்.
அவள் தனது கையை இழுத்துக்கொண்டாள், தனது விரல்களை வைத்து உள்ளங்கையை மூடினாள்.’ நீ பயப்பட வில்லையா’ என நான் கேட்டேன்.
அதற்கு ” நான் வளர்ந்ததும் போலீஸ் ஆகிவிடுவேன். தைரியமாக இருப்பேன். எதற்காக பயப்படவேண்டும்?” என என்னிடம் கேட்டாள்.
பதற்றம் அதிகரிக்கும்போது பள்ளி – கல்லூரிகள் மூடப்பட்டுவிடும். வகுப்புகள் முடிந்தபிறகு விவசாயத்தைத் தவிர குறைவான வேலைவாய்ப்புகளே இருக்கும். பெரும்பாலானவர்கள் காவல்துறை அல்லது ராணுவத்தில் ஏதாவது வேலை கிடைக்கிறதா என பார்ப்பார்கள்.
படத்தின் காப்புரிமைYAWAR NAZIRImage caption
நாங்கள் ஜம்முவில் உள்ள ரஜோரி மாவட்டத்திலுள்ள நௌஷெஹரா பகுதியில் ஜீரோ பாயிண்டில் நின்று கொண்டிருக்கிறோம். இங்கிருந்து பார்த்தால் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதி அருகே இந்திய ராணுவ கூடாரங்கள் தெரிகின்றன.
அனைத்து பகுதிகளிலும் ஆபத்து சூழ்ந்திருக்கிறது. ஷெல் தாக்குதலில் பெரும்பாலானவர்கள் தங்களது பிரியத்துக்குரியவரை இழந்துவிட்டார்கள். இதற்கு கலாசியா கிராமத்திலுள்ள ரத்தன் லாலின் மனைவியும் விதிவிலக்கல்ல.
படத்தின் காப்புரிமைAFPImage caption
போரின் விலை
” சிலர் வயலில் வேலை செய்வார்கள் மற்றவர்கள் வேறு எங்கேனும் வேலை செய்வார்கள். ஷெல் தாக்குதல் நடக்கும்போது அவர்களால் உடனடியாக பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்ல முடியாது. அப்போது எனது மனைவி கிணற்றில் நீர் இரைக்க சென்றிருந்தாள். உடனே ஒரு ஷெல் அங்கே விழுந்ததும் அவ்விடத்திலேயே இறந்துவிட்டாள்.
தனது குடும்பத்தில் ஒருவரை இழந்தும் கூட ரத்தன் லாலின் மகன் ராணுவத்தில் வேலை செய்கிறார்.
முறையான கல்வி இல்லாததால் தங்களது குழந்தைகள் ராணுவத்தில் சேர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள் என்கிறார் அவர்.
” தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து வரும் ஷெல் தாக்குதல் குழந்தைகளின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன” என்கிறார் அவருடைய அண்டை வீட்டுக்காரர் அஷ்வினி சவுதாரி.
”குழந்தைகள் இந்தச் சூழலில் தேர்வுக்கு தயாராக முடியாது. இந்தச் சூழலில் வளரும் குழந்தைகள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளோடு எப்படி போட்டிபோடுவார்கள்? கண்டிப்பாக முடியாது” என்றார்.
படத்தின் காப்புரிமைSOPA IMAGESImage caption
வீட்டுக்குள் சிறை
அருகேயுள்ள கனேஹா கிராமத்தின் சுதீஷ் குமாரியின் மகனும் ராணுவத்தில் இருக்கிறார். தற்போது அவர் ஸ்ரீநகரில் பணியாற்றுகிறார். ஆனால் சுதீஷ் குமாரியின் வாழ்வும் போர்களத்தில் இருப்பது போல இருக்கிறது.
அவரது வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் துளைகள் இருக்கின்றன. கண்ணாடிகளும், இடிப்பாடு சிதிலங்களும் சிதறிக்கிடக்கின்றன.
ஆறு மணி நேர ஷெல் தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் அவர்கள் மீளவில்லை.
”பதுங்குகுழியும் பாதிக்கப்பட்டுவிட்டது. சிறுவர் பெரியவர் என அனைவரும் அழுகிறார்கள். நாங்கள் எல்லோரும் பயந்து கிடக்கிறோம். எங்களைச் சுற்றி ஷெல் தாக்குதல் நடந்தது. எங்களால் வெளியே செல்ல முடியவில்லை” என உடைந்த குரலில் கூறுகிறார்.
சுதீஷ் குமாரி தாம் இச்குழலில் வீட்டுக்குள்ளேயே சிறை வைக்கபட்டதுபோல உணர்கிறார். பதற்றம் அதிகரித்தால் பெரும்பாலான பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல பயப்படுகிறார்கள்.
சிறு சிறு குழந்தைகள் மற்றும் கால்நடைகளுடன் அவர்களால் பள்ளிகளில் உள்ள முகாம்களில் முகம் தெரியாதவர்களோடு தங்குவது கடினம்.
படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMESImage caption
பதுங்குக்குழிக்கு காத்திருப்பு
சுதீஷின் கிராமத்தில் பதுங்குகுழி கட்டப்பட்டிருப்பது அவருக்கு சிறிய அதிர்ஷ்டமாக உள்ளது. ஆனால் பெரும்பாலான கிராமங்களில் ரத்தன் லால் உள்பட பலருக்கும் அதிர்ஷ்டம் இல்லை.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், உள்துறை அமைச்சகம் எல்லைப் பகுதியிலுள்ள கிராமத்தில் 14 ஆயிரம் பதுங்குக் குழிகள் கட்டப்படவுள்ளதாக தெரிவித்தது. ஆனால் தற்போது வரை 1500 பதுங்குக் குழிகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.
ரத்தன் லாலின் கிராமத்தினர் உள்பட பல்வேறு கிராமத்தினர் பதுங்குக் குழிக்காக காத்திருக்கின்றனர்.
ஜம்முவிலுள்ள ஒரு மண்டல கமிஷனர் சஞ்சீவ் வர்மா, அடுத்த மூன்று மாதங்களில் பதுங்குகுழிகள் கட்டப்பட்டுவிடும் என்கிறார்.
பதுங்குகுழிகள் பாதுகாப்பைத் தரும் ஆனால் அங்கே நீண்ட காலம் தங்கியிருக்க முடியாது. ஒரு பதுங்குகுழியில் ஒரு டஜனுக்கும் அதிகமானோர் தங்கியிருக்கின்றனர்.
பதுங்குக்குழிக்குள் தண்ணீர் புகுந்தால் ஈரம் காரணமாக மூச்சுத்திணறல் உண்டாகும். சுதீஷ் வீட்டின் அருகேயுள்ள பதுங்குகுழியிலும் இதுதான் நடந்தது.
திருமணம் முடிந்து இங்கு வரும்போது அபாயகரமான கட்டுப்பாடு எல்லை கோடு பகுதியின் அருகே வாழ்வதில் அவர் பெரிதாக துக்கப்படவில்லை ஆனால் தற்போது சோர்ந்துவிட்டார்.
”என்றாவது ஒருநாள் அமைதி ஏற்படும் என காத்திருக்கிறேன். அப்போது நாங்கள் அவசர அவசரமாக வெளியேற வேண்டியதில்லை. குழந்தைகள் ஷெல்களுடனும் வெடிபொருள்களுடனும் விளையாட வேண்டியதில்லை. ஆனால் புத்தகத்தை கையில் ஏந்தலாம். அந்நாளுக்காக காத்துக்கொண்டே இருக்கிறேன்” என்கிறார் சுதீஷ் குமாரி.