Home இலங்கை ஒரே பார்வையில் 2019 வரவு செலவுத்திட்டம்…

ஒரே பார்வையில் 2019 வரவு செலவுத்திட்டம்…

by admin

புதிய இளம் தம்பதிகளுக்கு 10 மில்லியன் ரூபா இலகு கடன் திட்டம்

நடுத்தர வருமானம் பெறும் முதற் தடவையாக வீட்டினைக் கொள்வனவு செய்யும் புதிய இளம் தம்பதிகளுக்கு வீடொன்றினைக் கொள்வனவு செய்வதற்கு அல்லது தங்களது முதல் வீட்டினை நிர்மாணித்துக் கொள்வதற்கு 10 மில்லியன் ரூபா இலகு கடன் திட்டங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த ´ஹோம் ஸ்வீட் ஹோம்´ கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.  10 மில்லியன் ரூபா வரையில் 6 சதவீத வட்டியில் 25 வருட காலத்தில் திருப்பிச்செலுத்தல் என்ற வகையில் கடன் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.  இக்கடன் திட்டமானது தனியார் துறையினால் நிர்மாணிக்கப்படும் வீடுகள் அல்லது நடுத்தரத்திலான மாடி வீடுகளை கொள்வனவு செய்வதற்கும் பெற்றுக் கொடுக்கப்படும்.  அத்துடன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வீடொன்றினைக் கட்டிக் கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.  ஆகவே, அவர்கள் வீடொன்றினைக் கட்டிக் கொள்ளும் கனவினை நிறைவேற்றக் கூடிய வகையில் ´என்டபிரைஸஸ் ஸ்ரீ லங்கா´ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ´சிகின மாளிகா´ சலுகைக் கடன் திட்டம் அறிமகப்படுத்தப்பட உள்ளது.  வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து தற்போது வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் இக்கடன் திட்டத்தின் கீழ் ரூபா 10 மில்லியன் வரை 15 வருட காலத்தில் திருப்பிச் செலுத்தல் என்ற வகையில் பெற்றுக் கொள்ளலாம்.  இக்கடனுக்கான வட்டிச் செலவினத்தில் 75 சதவீதத்தினை அரசாங்கம் பொறுப்பேற்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

கடவுச் சீட்டு தொடர்பான கட்டணங்கள் அதிகரிப்பு

கடவுச் சீட்டு ஒரு நாள் மற்றும் சாதாரண விநியோகம், கடவுச் சீட்டு திருத்தம் தொடர்பான கட்டணங்கள் 2019 ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து திருத்தப்பட உள்ளது.
அதனடிப்படையில் கடவுச் சீட்டு திருத்தம் தொடர்பாக இருந்த 500 ரூபா கட்டணம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளது.
அத்துடன் ஒரு நாள் சேவைக்கான கட்டணம் 10,000 ரூபாவில் இருந்து 15,000 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
சாதாரண விநியோக கட்டணம் 3,000 ரூபாவில் இருந்த 3,500 ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளது.

அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் விஷேட கொடுப்பனவு

அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் விஷேட கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  எமது அரசாங்கம் 2016 இல் 10,000 ரூபாவினை மாதாந்த இடைக்காலக் கொடுப்பனவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், 2016 இலிருந்து 2020 வரை 1:4.07 என்ற விகிதத்தினை பேணும் வகையில் 5 கட்டங்களாக அரச துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்திற்கு விசேட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.  இதன் விளைவாக அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதே காலப்பகுயில் 107 சதவீதத்தினால் அதிகரித்ததுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நோக்கத்திற்காக 2019 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தில் 40 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதன்பிரதிபலனாக, கீழ் படிநிலையிலுள்ள அரசாங்க ஊழியர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 2015 இல் காணப்பட்ட 11,730 ரூபாவிலிருந்து 2020 இல் 21,400 ரூபாவாக அதிகரிக்கும்.  ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட சம்பள ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையானது அதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவின் பரிந்துரைகள் வெளியானதும் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  எனவே, அனைத்து அரசாங்க ஊழியர்களுக்குமான இடைக்கால மாதாந்தக் கொடுப்பனவாக 2019 ஜூலை மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 2,500 ரூபாவினை வழங்குவதற்கு தான் முன்மொழிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கவீனமுற்றவர்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு

அங்கவீனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த தீர்மானம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் சிறுநீரக நோயாளர்களுக்கு 1800 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ஒதுக்கீடு

ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யத் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  2015 டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் இளைப்பாறிய ஏறக்குறைய 560,000 ஓய்வூதியம் பெறுநர்கள் காணப்படுவதுடன், அவர்களது ஓய்வூதியம் 06/2006 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்று நிருபத்தின் அடிப்படையில் கணிப்பீடு செய்யப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக, 2016 ஜனவரி 01 முதல் 2018 டிசெம்பர் 31 வரையான காலப்பகுதியின் போது ஏறக்குறைய 71,000 ஓய்வூதியம் பெறுநர்கள் இளைப்பாறியுள்ளதுடன், அவர்களது ஓய்வூதியம் 03/2016 ஆம் இலக்க பொதுநிர்வாக சுற்றறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் இளைப்பாறிய நேரத்தில் பெற்றுக் கொண்ட அடிப்படைச் சம்பளத்திற்கமைவாக கணிப்பீடு செய்யப்படுகின்றது.

எனவே, 2016 ஜனவரி 1ஆம் திகதிக்கு முன்னர் இளைப்பாறியவர்களும் 03/2016 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றுநிருபத்தின் கீழ் பல்வேறு மட்டங்களில் வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்புக்கு தகைமைபெற்ற அத்திகதிக்குப் பின்னர் இளைப்பாறியவர்களுக்குமிடையில் பெறும் ஓய்வூதியத்தில் முரண்பாடு காணப்படுகிறது.

2019 ஜூலை 01 ஆம் திகதியிலிருந்து பயன்வலுப்பெறும் வகையில் இளைப்பாறும் காலத்தில் ஓய்வூதியம் பெறுநரினால் பெற்றுக் கொள்ளப்பட்ட அடிப்படை சம்பளத்திற்கு 03/2016 ஆம் இலக்க பொதுநிர்வாக சுற்றறிக்கையின் முதல் 2 கட்டங்களைச் சேர்ப்பதன் மூலம் ஓய்வூதிய திருத்தமொன்றினை முன்னெடுப்பதற்கு முன்மொழிவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  அத்துடன் ஓய்வூதிய முரண்பாடுகளை திருத்துவதற்கு இவ்வருடத்திற்காக ரூபா 12,000 மில்லியனை மேலதிகமாக ஒதுக்கீடு செய்வதற்கும் முன்மொழிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 585,000 ஓய்வூதியம் பெறுநர்கள் நன்மையடைவர் எனவம் உதாரணமாக கீழ்படித் தரத்தையுடைய அரசாங்க ஊழியரின் ஓய்வூதியம் மாதமொன்றுக்கு ஆகக்குறைந்தது 1,600 ரூபாவினால் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  தரம் ஏ ஐச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் மாதாந்த ஓய்வூதியம் 4,600 ரூபாவினாலும் அமைச்சின் செயலாளர் ஒருவரின் ஓய்வூதியம் மாதாந்தம் 12,000 ரூபாவினாலும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  இத்திருத்தமானது 25 வருட சேவை மற்றும் 2015 டிசெம்பர் 31 இற்கு முன்னரான இளைப்பாறுதலினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும்.

அதிவேகப் பாதைகளின் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு
அதிவேகப் பாதைகளின் நுழைவுக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அதனடிப்படையில் வாகன நெரிசல் மிக்க நேரங்களின் போது அதிவேகப் பாதைகளின் நுழைவுக் கட்டணத்தை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  2019 ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து இந்த கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வர உள்ளது.

கொமாண்டோ கொடுப்பனவு 20 வருடங்களுக்கு பின்னர் அதிகரிப்பு
பொலிஸ் திணைக்களத்திற்கான கொடுப்பனவுகள் அனைத்தும் 2017 மற்றும் 2018 இல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், 20 வருடங்களுக்கு மேலாக சிறுதளவாவது அதிகரிக்கப்படாதுள்ள இராணுவத்தினரின் கொமாண்டோ கொடுப்பனவு, சீருடைக் கொடுப்பனவு, வாடகைக் கொடுப்பனவு மற்றும் நன்நடத்தைக் கொடுப்பனவு என்பன 2019 யூலை மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அதிகரிக்கப்படும்.  அதனடிப்படையில் கொமாண்டோ கொடுப்பனவு மாதாந்தம் ரூபா 1,000 இலிருந்து ரூபா 5,000 ஆக அதிகரிக்கப்படும்.  இது இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையினதும் சமாந்தர படி நிலைகளுக்கும் ஏற்புடையதாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

கசினோ விளையாட்டுக்கான வருடாந்த உரிமக் கட்டணம் அதிகரிப்பு
கசினோ விளையாட்டுக்கான வருடாந்த உரிமக் கட்டணம் ரூபா 200 மில்லியனிலிருந்து 400 மில்லியனாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ருத்ஜினோ விளையாட்டுக்கான வருடாந்த உரிமக் கட்டணமாக ரூபா 1,000,000 அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கசினோ புரள்வு வரி 15 சதவீதமாக அறவிடப்பட உள்ளதுடன் கசினோ நுழைவுக் கட்டணம் ஆளொருவருக்கு 50 ஐ.அ. டொலர் அறிவிடப்பட உள்ளது. இந்த திருத்தங்கள் 2019 ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வர உள்ளது.

மதுபானத்திற்கான உற்பத்தி வரி அதிகரிப்பு
750 மில்லி லீட்டர் வன் மதுபான போத்தல் ஒன்றிற்கான உற்பத்தி வரி 63 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் 330 மில்லி லீட்டர் பியர் போத்தல் ஒன்றிற்கான உற்பத்தி வரி 9 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  வருடாந்த பண வீக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பவற்றின் அடிப்படையிலான சுட்டியொன்றினை அடிப்படையாகக் கொண்டு ஆகக் குறைந்த வருடாந்த உற்பத்தித் தீர்வை கணிப்பீடு செய்யப்படுவதோடு 2019 மார்ச் 06 ஆம் திகதி முதல் விலைச்சுட்டியின் அடிப்படையில் திருத்தப்படும்.  உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வன் மதுபானங்கள் மீதான மதுவரி 8 சதவீதத்தினாலும் பாகு மதுமானம் மீதான உற்பத்தித் தீர்வை 12 சதவீதத்தினாலும் வருடாந்த பண வீக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பவற்றின் அடிப்படையிலான சுட்டியொன்றினை அடிப்படையாகக் கொண்டு ஆகக் குறைந்த வருடாந்த தீர்வை கணிக்கப்படும்.  விசேட சாராயத்திற்கான உற்பத்தித் தீர்வையானது தொடர்ந்து மாறாதிருக்கும்.

பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு
பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அதனடிப்படையில் 800 ccக்கு குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 150,000 ரூபாவினாலும், 1000 ccக்கு குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 175,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளது.  அத்துடன் 1300 ccக்கு குறைந்த பெற்றோல் வாகனுங்களுக்கான இறக்குமதி வரி 500,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை, 200 cc முச்சக்கர வண்டிகளுக்கு 60,000 ரூபா இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.  கிலோ வோட் 70 மின்சார மோட்டார் இலத்திரனியல் வாகனங்களுக்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பபட்டுள்ளது.

சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவிலிருந்து 5 ரூபாயால் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  சிகரட்டுகள் மீதான உற்பத்தித் தீர்வை 60 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட கூறுகளுக்கு 2019 மார்ச் 06 ஆம் திகதியிலிருந்து 12 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளது.  இதனால் ஒவ்வொரு தனிக்கூருக்குமான விலையானது சராசரியாக ரூபா 5 இனால் அதிகரிக்கப்பட உள்ளது.  அத்துடன் 2019 ஜூன் 01 ஆம் திகதியிலிருந்து சிகரட்டுகள் உற்பத்தி மீதான தேச கட்டுமான வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  வருடாந்த பண வீக்கம் மற்றும் மொத்தத் தேசிய உற்பத்தி வளர்ச்சி என்பவற்றினைக் கொண்டு ஆகக் குறைந்த வருடாந்த தீர்வை அதிகரிப்புடன் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு சிகரட்டுகள் மீதான உற்பத்தித் தீர்வை விதிக்கப்படும்.  இது வருமான பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன் செலவினத்தினையும் கட்டுப்படுத்தும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சகலருக்கும் கழிப்பறை வசதிகளை அமைத்துக் கொடுப்பதற்காக 4 பில்லியன் ரூபா
சகலருக்கும் கழிப்பறை வசதிகளை அமைத்துக் கொடுப்பதற்காக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  100,000 க்கு மேற்பட்டோருக்கு கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும், மொனராகலையில் மாத்திரம் 35,000 குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  பாராளுமன்றத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அத்துடன் புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு அவை தனியாருக்கு நிர்வகிக்க கொடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க கருத்திட்டங்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது
அரசாங்க கருத்திட்டங்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  அவ்வாறு கருத்திட்டங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் உள்நாட்டுக் கட்டுமான நிறுவனங்களுடனோ உள்ளூர் ஆலோசனை வழங்கும் நிறுவனங்களுடனோ கூட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  இதன்மூலம் உள்ளூர் நிறுவனங்களுக்கு புதிய தொழில்நுட்பத்தினை பெற்றுக் கொள்வதற்கு வசதியேற்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  உள்ளுர் கட்டுமான நிறுவனங்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More