தமது பிரச்சினைகளை தாமே தீர்த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வேண்டுகோள் விடுப்பதற்காக மூவரடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்றை ஜெனீவாவுக்கு அனுப்பவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட அவர், இதற்கமைவாக, கலாநிதி சரத் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் இந்தப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வருடம் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருந்தாலும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நோக்கும்போது முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் எனவும் இது தேர்தல் வருடம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை, போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பதற்காக உலகின் அதியுயர் தொழில்நுட்பங்களைப் பெற்றுக்கொள்வதற்கு முதலீடு செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அநேகமான அதிகாரிகள் அநீதியான முறையில் நடத்தப்படுவதால் காவற்துறைத் திணைக்களம் பூரண மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக காவற்துறைத் திணைக்களத்திற்கு பொறுப்பாகவிருந்த அமைச்சுக்கள் காவற்துறைத் திணைக்களத்தை அரசியல் மயமாக்கியுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, இந்த நிலைமையை உடனடியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
காவற்துறைத் உத்தியோகத்தர்கள் 8 மணித்தியால சேவையில் ஈடுபடுவது மிகவும் அரிதானது என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, சில சந்தர்ப்பங்களில் உணவு மற்றும் நீரின்றி 12 மணித்தியாலங்களுக்கு மேல் அவர்கள் சேவையில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால், காவற்துறைத் திணைக்களத்தை தாம் பூரண மறுசீரமைப்புக்கு உட்படுத்தவுள்ளதாகவும் உத்தியோகத்தர்களின் குறைகளை தனித்தனியாக கேட்டறியவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதேநேரம், தமிழ்மொழி பேசும் காவற்துறைத் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். காவற்துறைத் திணைக்களத்தை அரசியல் சார்பற்ற திணைக்களமாக மாற்றி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நவீன காவற்துறைத் திணைக்களமாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளிடம் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் .