கடந்த மாதம் 10 ஆம் திகதி மூன்று கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா கோவில்குளம், சிவன் கோவிலிலிருந்து ஆராம்பித்த வவுனியாவைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபனின் துவிச்சக்கர பயணம் நேற்று புதன் கிழமை இரவு மன்னார் நகரை சென்றடைந்தது. இதனையடுத்து இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் மீண்டும் மன்னாரில் இருந்து வவுனியாவை நோக்கிய தனது துவிச்சக்கர வண்டிப்பயணத்தை ஆரம்பித்தார்.
தர்மலிங்கம் பிரதாபன் சுமார் 2125 கிலோமீட்டர் தூரம் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கவுள்ள நிலையில் நாட்டின் பல இடங்களுக்கும் சென்றுள்ளஅவர் மன்னாரை சென்றடைந்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும், லயன் அறைகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும், யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் எனும் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அவர் இந்தப் பயணத்தை முன்னெடுத்துள்ளார்.
25 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமை காலை மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ள தர்மலிங்கம் பிரதாபன் வவுனியாவுடன் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.