ஒவ்வொரு வருடமும் இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு 2 பேருக்கு வழங்கப்படும் என நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
சுவீடிஷ் இலக்கிய பேரவையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் புகைப்பட கலைஞரான ஜீன் கிளாட் அர்னால்ட்டுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதனையடுத்து அவரது மனைவியான கவிஞர் கத்தரினாவும் பல முக்கிய உறுப்பினர்களும் பேரவையிலிருந்து வெளியேறியிருந்தனர்.
இந்த பிரச்சினைகளால் 2018-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது புதிய உறுப்பினர்களுடன் சுவீடிஷ் இலக்கிய பேரவை சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டுக்கும் சேர்த்து இந்த ஆண்டு 2 பேருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படும் என நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறும் 2 இலக்கியவாதிகள் யார் என்பதை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சுவீடிஷ் இலக்கிய பேரவை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.