சவூதி அரேபியாவிற்கான ஆயுத ஏற்றுமதிக்கான ஒருதலைப்பட்ச நிறுத்தத்தை இம்மாத இறுதிவரை நீடிக்கவுள்ளதாக ஜேர்மன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த ஆயுத தடை மார்ச் 9ஆம் திகதியுடன் நீக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், தடை நீடிப்பு குறித்த அறிவிப்பை ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீக்கோ மாஸ் வெளியிட்டுள்ளார். டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சருடன் இணைந்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சவூதி அரேபிய கூட்டுப் படைகளின் ஆதரவுடன் ஏமனில் இடம்பெற்றுவரும் போரை அடிப்படையாகக் கொண்டே ஜேர்மன் அரசாங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது எனத் தெரிவித்த ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏமன் போர் முடிந்தளவு விரைவில் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக உள்ளதனாலேயே ஆயுத ஏற்றுமதியை நிறுத்த தீர்மானித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.