மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் காவல்துறையினர் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்து 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரது தடுப்புக்காவல் மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 120 பேரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் சோதனைச் சாவடியில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 19ம் திகதி நள்ளிரவு கடமையில் இருந்த காவல்துறையினர் இருவர் இனந் தெரியாதோரால் கொலை செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்த இரு கைத்துப்பாக்கிகளும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பில் கரையக்கந்தீவைச் சேர்ந்த கண்ணன் என அழைக்கப்படும் கதிர்காம தம்பிராசா குமரன் எனப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட தகவலுக்கமைய புலிகளின் சாள்ஸ் அண்டனி படைப்பிரிவில் கடமையாற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய இமையன் எனப்படும் வாசலிங்கம் சர்வானந்தன கைது செய்யப்பட்டதுடன், இருவரும் 90 நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கண்ணன் என அழைக்கப்படும் கதிர்காம தம்பிராசா குமரன் என்பவரையே மீண்டும் ஒரு மாதகாலம் தடுப்புகாவலில் வைத்து விசாரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்ததையடுத்து அவரின் தடுப்பு காவல் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கைது செய்து 90 நாள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இமையன் எனப்படும் வாசலிங்கம் சர்வானந்தன் கடந்த ஜனவரி மாதம் 11 ம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ் விவகாரம் தொடர்பாக இதுவரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட முன்னாள் முன்னாள் விடுதலைப் புலிகளின பெண் உறுப்பினர்கள் என 120 க்கு மேற்பட்டோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன் பல கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றதாக அவர் தெரிவித்தார்.