வரி மற்றும் வங்கி மோசடி தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முன்னாள் பிரச்சார மேலாளரான போல் மானபோர்ட்டுக்கு 47 மாத சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உக்ரைனில் அரசியல் பிரச்சாரகராக செயல்பட்டதன் மூலம் கிடைத்த மில்லியன்கணக்கான வருமானத்தை மறைத்தமை தொடர்பான வழக்கில், மானபோர்ட் கடந்த வருடம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 47 மாத சிறைத்தண்டனையுடன் அவர் சட்டவிரோதமாக பெற்ற 24 மில்லியன் டொலர்களை திரும்ப வழங்க வேண்டும் என்பதுடன் 50 ஆயிரம் டொலர்களை அபராதமாக செலுத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதேவேளை போல் மானபோர்ட் மீதான சட்டவிரோதமான கூட்டு நடவடிக்கை தொடர்பான வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கும், ரஸ்யாவுக்கும் தொடர்புள்ளதா என எழுந்த சந்தேகங்களின் ஒரு பகுதியாக நடக்கும் இந்த வழக்கின் விசாரணை கடந்த 22 மாதங்களாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.