இந்திய அரசுக்காக ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்த போது மேற்கொண்ட ஊழல் தொடர்பில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இடைத்தரகராக செயற்பட்ட கிறிஸ்டியன் மைக்கலின் முன்னாள் மனைவியில் சொத்துக்களை அமுலாக்கத்துறை முடக்கியுள்ளது. இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து 3,600 கோடி ரூபாவுக்கு 12 ஹெலிகொப்டர்கள் வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்த போது இந்தியாவில் உள்ள சிலருக்கு அந்த நிறுவனம் 10 சதவீதம் லஞ்சம் வழங்கியதாக எழுந்த முறைப்பாடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமுலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளன.
இந்த முறைகேடுகள் தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இடைத்தரகராக செயற்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டு அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மைக்கேலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பாரிஸ் நகரின் விக்டர் ஹூகோ பகுதியில் மைக்கேலின் முன்னாள் மனைவி வலேரி மிஷெலுக்கு சொந்தமான 5.83 கோடி ரூபா பெறுமதியான சொத்துகளை அமுலாக்கத் துறை முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் ஒப்பந்த பேரத்தில் பெற்ற லஞ்சப் பணம், பல்வேறு நிறுவனங்கள் வழியாக கொண்டு செல்லப்பட்டு இந்த சொத்துகள் வாங்கப்பட்டுள்ளதாக அமுலாக்கத் துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது