முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 49 பேருக்கு எதிராக ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த யாதுரிமை எழுத்தாணை மனு, முறைப்பாட்டாளர்களால் இன்று (12.03.19) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம், ஜனாதிபதியினால் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஸ மற்றும் 48 பேர் அடங்கலான அமைச்சரவை உறுப்பினர்கள், அந்தப் பதவிகளை வகிப்பதற்கு சட்டபூர்வ உரிமை இல்லை என அறிவித்து அவர்களை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரகளும் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 122 பேர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணைகள் இன்று மேன்முறையீட்டு நீதிபதி அர்ஜூன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவில் கோரியிருந்த கோரிக்கைகள் தற்போது நிறைவேறியுள்ளதால் மனுவைத் தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என மனுதாரரான ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி, மனுதாரர்களுக்கு மனுவை வாபஸ் பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.