247
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் கரடிபோக்குச் சந்தியில் கரைச்சி பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் பிரதேச சபையானது சட்டவிரோதமாக ஐந்து பேருக்கு வியாபார நிலையங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கிய விடயம் தொடர்பில் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரின் உத்தரவையும் மீறி பிரதேச சபை செயற்பட்டு வருகிறது என கரைச்சி பிரதேச சபையின் ஆளும் மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த பகுதியில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் முன்னாள் போராளிகளுக்கு கடை வழங்குவதாக தெரிவித்து தனக்கு நெருக்கமானர்களுக்கும், ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் உறவினருக்குமாக ஐந்து பேருக்கு கடையினை வழங்கியுள்ளார். ஆனால் இவர்கள் அனைவரும் தற்போது பிரிதொரு இடத்தில் வியாபாரம் நிலையம் அமைத்து நடத்தி வருகின்றவர்கள்.இதில் மூன்று பேர் முன்னாள் போராளிகள்.
இந்த நிலையில் குறித்த வியாபார நிலையங்கள் அரசியல் நலன்களுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளது என்றும் வாழ்வாதாரத்திற்காக நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் தங்களுக்கும் ஒரு கடையினை அமைக்க இடம்வழங்குமாறு கோரிக்கை விடுத்து காத்திருக்கின்ற நிலையில் வியாபாரம் செய்து வருகின்றவர்களுக்கு கடையினை கேள்வி மனுகோரல் மற்றும் சபையின் அனுமதி என எந்த நடைமுறையினையும் பின்பற்றாது தவிசாளரால் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொது மக்கள் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஆளுநர் மற்றும் மாகாண உள்ளுராட்சி ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் குறித்த சட்டவிரோதமாக வழங்கப்பட்ட கடைகளை உடனடியாக நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாகாண ம.பற்றிக் டிறஞ்சன் கரைச்சி பிரதேச சபைக்கு அறிவித்த போதும் பிரதேச சபை அதனை கருத்தில் எடுக்கா தொடர்ந்தும் நிரந்தரமாக வியாபாரம் நிலையம் அமைக்கவும் வியாபாரத்தை ஆரம்பிக்கவும் அனுமதித்துள்ளது. இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபை அமர்விலும் ஆளும் மற்றும் எதிர் தரப்பு உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்த போதும் தவிசாளர் அதனை கருத்தில் எடுக்கவில்லை.
இது தொடர்பில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சனை தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த விடயம் தொடர்பில் தான் உரிய மேலதிக நடவடிக்கை மேறகொள்வேன் எனத் தெரிவித்தார்.
Spread the love