குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நேர்த்தி கடனை நிறைவேற்றும் முகமாக காவடி எடுப்போர் மற்றும் காவடிக்கு முள்ளு குத்துவோர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்.சாவகச்சேரி சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. அது தொடர்பில் சுகாதார திணைக்களம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,
ஆலயத்திற்கு நேர்த்தி வைத்து காவடி எடுப்போரின் நலன் கருதி காவடி முள்ளு குத்துவோர் மற்றும் காவடி எடுப்போர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதார முறைகளை பேணாத முட்களால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதனால் கட்டாயம் அவர்கள் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வரலாற்று சிறப்பு மிக்க மட்டுவில் அம்மன் ஆலய பங்குனி திங்கள் பொங்கல் உற்சவங்கள் நடைபெறவுள்ளன. அதனை ஒட்டி ஆலய சூழலில் தண்ணீர் பந்தல்கள் நடத்துவோர் தண்ணீர் எடுக்கும் கிணறுகள் தொடர்பில் சுகாதார திணைக்களத்திற்கு அறிவித்து , சுகாதார பரிசோதகரின் அனுமதி பெற்றே நீரினை பயன்படுத்த வேண்டும்.
தற்போது ஏற்பட்டு உள்ள கடும் வெப்பம் காரணமாக ஆலயத்திற்கு சிறுவர்கள் குழந்தைகளை அழைத்து வருவோர் தாமே சுத்தமான குடிநீரை கொண்டு வருவது உகந்தது.
மக்களின் சுகாதார நலன் கருத்தியே இவ்வாறன நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளோம் எனவே அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது