நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், பங்களாதேஸ் கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதைத் தொடர்ந்து அந்த அணியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பங்களாதேஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்ற நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நாளை ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில், இன்று தொழுகைக்காக கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மைதானத்தின் அருகே உள்ள மசூதிக்கு சென்றிருந்தபோது மசூதிக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். இதனையடுத்து கிரிக்கெட் வீரர்களை அதிகாரிகள் அவசரம் அவசரமாக வெளியே அழைத்துச் சென்று அருகில் இருந்த பூங்கா வழியாக அவர்கள் தங்கியிருந்கும் விடுதிக்கு அழை;த்துச் சென்றுள்ளனர்.
வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அணியின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ள போதிலும் இந்த சம்பவத்தால் வீரர்கள் மனதளவில் அதிர்ச்சி அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.அத்துடன் வீரர்கள் யாரும் விடுதியை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகின்றதனால் நாளை நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்வதாக பங்களாதேஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து சுற்றுப்பயணமும் முடிவுக்கு வந்துள்ளது