முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய சர்ச்சை தொடர்பான வழக்கு மார் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு ஜனவரி 14ஆம் திகதி அன்று பொங்கல் வழிபாடுகளுக்காக சென்ற பிரதேச தமிழ் மக்களுக்கும் கோவில் வளாகத்தை ஆக்கிரமித்து குடியிருக்கும் பௌத்த பிக்குவுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.
இதனடிப்படையில் குறித்த இடத்தில் ஏற்படட பிரச்சினைகள் தொடர்பில் சமாதான குலைவு ஏற்பட்டதாக முல்லைத்தீவு காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட வழக்கு கட்டளைக்காக மார்ச் 22 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
இன்று காலை முல்லைத்தீவு நீதிமன்றில் நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கு கட்டளை மார்ச் 22 ம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது என மன்றில் முன்னிலையான சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தெரிவித்தார்.
அத்துடன் இந்த விடயத்துடன் தொடர்புபடுத்தி ஆலய தரப்பினரால் பௌத்த மதகுருவை அச்சுறுத்தியது மற்றும் தொல்பொருள் திணைக்கள பொருட்களை சேதப்படுத்தியது தொடர்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆலய பெயர்ப்பலகை மாற்றப்பட்டபோது, முல்லை காவல் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தபோது காவல்துறையினர் இதுதொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதுதொடர்பிலும் மன்று ஆராய்ந்து இரண்டு வழக்குகளுக்கும் மார்ச் 22ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் மேலும் தெரிவித்தார்.