நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரரான கேன் வில்லியம்சன் 3-வது முறையாக சேர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதை பெற்று சாதனைப் படைத்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணித் தலைவரான கேன் வில்லியம்சன். இந்த தலைமுறையின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக உள்ள நிலையில் அவரது தலைமையிலான நியூசிலாந்து அணியானது மேற்கிந்திய தீவுகள் , இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.
மேலும் இந்தப் பருவகாலத்தில் கேன் வில்லியம்சன் டெஸ்ட் போட்டிகளில் 925 ஓட்டங்களும், ஒருநாள் போட்டியில் 838 ஓட்டங்களும், இருபதுக்கு 20 போட்டியில் 332 ஓட்டங்களும் அடித்துள்ளார். அந்தவகையில் ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மிக உயரிய விருதான சேர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதை இந்த முறை கேன் வில்லியம்சனுக்கு வழங்கியுள்ளது.
ஏற்கனவே இரண்டு முறை இந்த விருதை வென்றுள்ள அவர் இதன்மூலம் மூன்று முறை சேர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.