காஞ்சிபுரம் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது சிசுவின் தலை துண்டானது தொடர்பாக ஆறு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையகம் கடிதம் அனுப்பியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 19ஆம் திகதி மருத்துவர் இல்லாததால், கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அங்கிருந்த தாதி ஒருவர் பிரசவம் பார்த்த போது குழந்தையை வெளியே இழுக்கும்போது குழந்தை தலை துண்டாகியிருந்தது.
இதையடுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் தாயின் வயிற்றிலிருந்து சிசுவின் உடல் எடுக்கப்பட்டது. இதையடுத்து, தாயின் வயிற்றில் இறந்த நிலையிலேயே குழந்தை இரண்டு நாட்கள் இருந்ததே தலை துண்டானதற்குக் காரணம் என விளக்கமளித்த பொது சுகாதாரத் துறை இயக்குநர் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அதற்கென்று குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையகம் குழந்தை தலை துண்டான விவகாரம் குறித்து ஆறு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலர், பொது சுகாதாரத் துறை இயக்குநர், நோய்தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.