ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை வரவேற்றுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, குறித்த தீர்மானத்தில் காலவரையறை விதிக்கப்படாமை கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இனிமேலும் காலதாமதம் ஏற்படாத வகையில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் மூன்று தசாப்த காலமாகத் தொடர்ந்த யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பான செயற்பாடுகளின் முக்கியமானதொரு படிமுறையாக 40(1) தீர்மானத்தைக் கருதுவதாகவும் சபை தெரிவித்தது.
அதேவேளை ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் நிறைவேற்றப்பட வேண்டிய கடப்பாடுகளை குறித்த காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற காலவரையறை விதிக்கப்படாமை கவலையளிப்பதாகவும் மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 40(1) தீர்மானம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப் பிராந்திய பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.