குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் சர்வ மதப் பேரவையில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ள இந்து சமயச் சகோதரர்கள் தமது முடிவை மீள்பரிசீலனை செய்து மீண்டும் இப்பேரவையில் இணைந்து செயலாற்ற முன்வரவேண்டுமென அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் என மன்னார் சர்வதமப்பேரவை தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் சர்வமதப்பேரவை இன்று (24) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மன்னார் மாவட்டத்தில் பல்லின பல்சமய மக்கள் பல நூற்றாண்டு காலகமாக ஒற்றுமையாக, அமைதியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் எதிர் கொண்ட பல்வேறு பிரச்சினைகளில் மதம் சார்ந்த, இனம் சார்ந்த பிரச்சினைகளும் உள்ளடங்கும். அண்மைக் காலங்களில் மன்னார் மாவட்டத்தில் மதம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இது மிகவும் கவலை அளிக்கும் ஒரு யதார்த்தமாக உள்ளது.
அண்மையில் திருக்கேதீஸ்வரம் – மாந்தைச் சந்தியில் நிறுவப்பட்ட வளைவு தொடர்பான பிரச்சினை ஊடகங்கள் வாயிலாக முழு நாட்டையும் சென்றடைந்த பிரச்சினையாக உள்ளது.சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் விரும்பும் அனைவருக்கும் இப்பிரச்சினை மிகவும் கவலை அளிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக மன்னார் சர்வமதப் பேரவை தனது ஆழ்ந்த அக்கறையையும் கவலையையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.
இப்பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துவைக்கும் முயற்சியையும் மன்னார் சர்வமதப் பேரவை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.இப்பிரச்சினையோடு தொடர்புடைய கத்தோலிக்கத் தரப்பினருடனும் இந்துத் தரப்பினருடனும் முதற்கட்ட சந்திப்புக்களை நடத்தி ஒவ்வொரு தரப்பு நியாயத்தையும் விளக்கமாகக் கேட்டறிந்துள்ளது.
சம்மந்தப்பட்ட தரப்பினரோடு இன்னும் பல பேச்சுவார்த்தைகளை நடாத்தி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான, நீதியான ஒரு தீர்வை எட்டுவதற்கு மன்னார் சர்வமதப் பேரவை தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளது.
எனவே எமது முயற்சிக்கு அனைவரது ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம். உலகத்தில் உள்ள நான்கு முக்கிய மதங்களைப் பின்பற்றும் மக்களைக் கொண்டுள்ள இந்த நாட்டில்தான் மதப்பிரச்சினைகளும் இனப்பிரச்சினைகளும் முனைப்புப் பெற்றுள்ளன.
ஒவ்வொரு மதங்களும் கூறும் அறநெறிகளை, விழுமியங்களை வாழ்வாக்குவதன் மூலம் அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்த முடியும்.
மன்னார் சர்வமதப் பேரவையில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ள இந்துசமயச் சகோதரர்கள் தமது முடிவை மீள்பரிசீலனை செய்து மீண்டும் இப்பேரவையில் இணைந்து செயலாற்ற முன்வரவேண்டுமென அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
திருக்கேதீஸ்வர – மாந்தைப் பிரச்சினைக்கு சமயங்கள் கூறும் உயர் விழுமியங்களான புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, மன்னிப்பு போன்றவற்றின் அடிப்படையில் சுமுகமான ஒரு தீர்வைக் காண சம்மந்தப்பட்ட தரப்பினரும், ஏனையவர்களும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென மன்னார் சர்வமதப் பேரவையினராகிய நாம் அன்புடன் அழைப்புவிடுக்கின்றோம்.என குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.