கடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை என மாநில மற்றும் மத்திய அரசுகள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த பொதுநல மனுவில் தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது எனவும் இதனால், வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதுடன் வனப்பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாமல் வனவிலங்குகள் சிரமப்படுகின்றன.
அதனால், வனப்பகுதிகளை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் வனங்களைப் பாதுகாக்க வழங்கப்பட்ட நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்ற விவரத்தைத் தெரிவிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் , கடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, நடப்பட்ட மரங்களைக் காப்பாற்றுவதற்கு போதுமான பாதுகாப்புகள் வழங்கப்பட்டதா, போதுமான வன ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா, நிரப்பப்பட வேண்டிய பணியிடங்கள் எத்தனை, கடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை என மாநில வாரியாக மத்திய அரசும், மாவட்ட வாரியாக மாநில அரசும் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது