Home இலங்கை அப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்

அப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்

by admin
எல்லா அப்பாக்கள் போன்று நானும் எனது மகன் என்னை அப்பா என்றழைக்கும் அந்த தருணத்திற்காக காத்திருந்தேன். ஓமந்தை தடுப்பு முகாமில் நான் எதிர்பார்த்து காத்திருந்த அத்தருணம் வந்தது. தாயுடன் என் மகனை ஆறு மாதங்களுக்கு பின் சந்திருக்கிறேன். இப்போது அவன் மழலை மொழியில் பேசுகிறான். அந்த மழலை மொழியில் அப்பா என்று  கூப்பிடுவான் என்ற ஆவலோடு அருகில் சென்றேன். மாமா என்றான் என் நெஞ்சுக்குள் தற்கொலை தாக்குதல் நடந்து போன்றிருந்தது. அந்த வார்த்தை இடியாக இதயத்திற்குள் இறங்கியது. திகைத்து  போய் நின்றேன். மனைவி விறைத்து போய் நின்றாள்  அவளது முகத்தில் கண்ணீர் வடிந்தோடியது. என்றார் குழந்தைவேல் விஜயகுமார்.
கிளிநொச்சி உதயநகரைச் சேர்ந்த ஒரு முன்னாள்  போராளியான குழந்தைவேல் விஜயகுமார் 2009 நவம்பர் மாதம்  ஓமந்தை தடுப்பு முகாமில் இடம்பெற்ற அந்த பத்து நிமிட சந்திப்பை பற்றி குறிப்பிடும் போதே  இவ்வாறு தெரிவித்தார். தனது வாழ்நாளில்  மறக்க முடியாத அந்த சந்திப்பு இன்றும் பசுமரத்து ஆணி போல் மனதில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
2007 ஆம் ஆண்டு திருமணம் செய்த விஜயகுமாருக்கு 2008.05.18 ஆம் திகதி மகன் தர்சன் பிறந்திருக்கிறார். அப்பா என்ற அந்தஸ்த்து கிடைக்கிறது. இயக்கப் பணி, காரணமாக வீட்டுக்கு வந்து செல்வது அவ்வவ்போதுதான். அப்பா என்ற வாழ்க்கையின் ஒரு படியை கடந்த அவருக்கு மகன் அப்பா என்றழைக்கும் தருணத்திற்காகவும் காத்திருந்திருக்கின்றார்.
மகன் பிறந்த காலப்பகுதி இறுதி யுத்தம் தீவிரமடைந்துக்கொண்டிருந்த காலம். கிளிநொச்சி இடப்பெயர்வு, அதன் பின்னர் தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால்வரை இடம்பெயர்ந்த வாழ்க்கை இதனால் தான் மகனோடு செலவழித்த காலங்கள் மிகவும் குறைவு இதனால் தனது முகம் மகனுக்கு நெருக்கமில்லாது போய்விட்டது. மகனின் முதலாவது பிறந்த நாளான 2009.05.18 அன்று  வட்டுவாகலில் வைத்து இராணுவத்தினரால் பேரூந்தில் ஏற்றப்படுகின்றோம். 18 ஆம் திகதி பேரூந்தில் ஏறிய நாம் 20 ஆம் திகதி ஓமந்தையை வந்தடைந்தோம். அந்த  இரண்டு நாட்கள்தான் எனது மகனோடு நானிருந்த அதிக நேரம். அதற்கு முன் ஒரு நாளும் அவ்வாறு இருந்ததில்லை. ஆனால் அந்த இரண்டு நாட்களும் மகிழ்ச்சியாய் இருந்ததில்லை.
ஓமந்தையில் நான் இராணுவத்திடம் சரணடைந்தேன்  மனைவி மகனுடன் தனியாக எவரது உதவியுமின்றி  செட்டிக்குளம் முகாமுக்கு அழைத்துச்செல்லப்படுகின்றார்.பின்னர்தான் தெரியும் அவர் மெனிக்பாம் ஆனந்தகுமாரசாமி முகாமில் கொண்டு சென்று விடப்பட்டார் என்று. இதன் பின்னர் ஆறு மாதங்களாக எங்களுக்குள் எந்த தொடர்புமில்லை.  மனைவிக்கு தெரியாது நான் எங்கிருக்கிறேன் என்று. எனக்கு தெரியாது மனைவி எங்கு எப்படி இருக்கின்றார் என்று. பின்னர் முகாமிலிருந்து திருகோணமலையில் உள்ள உறவினர்களிடம் மனைவியும் மகனும் சென்றுவிட்டனர். ஆறு மாதங்களின் பின்னர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலமே மனைவி நான் ஓமந்தையில் இருப்பதை அறிந்துகொண்டார். அங்கிருந்தே 2009 நவம்பர் மாதம் ஓமந்தை தடுப்பு முகாமுக்கு என்னை சந்திப்பதற்கு வந்திருந்தனர். அந்த 10 நிமிட சந்திப்பே என் வாழ்க்கையில் மறக்க முடியாத சந்திப்பு.
எனது மகனின் வாயால் அவனது மழலை மொழியில் அப்பா என அழைப்பான் என ஆவலோடு இருந்த போது மாமா என்றான் அத்தருணம் என் உணர்வுகள் ஒரு அப்பாவாக மரணித்தன. மகனின் மூன்று வயது வரை அவனருகில் நான் இருந்து பழகி விளையாடியது கிடையாது. அவன் பிறந்து ஒரு வயது வரை இயக்கப் பணிகள் நிமித்தம்  நேரம் கிடைப்பதில்லை பின்னர் மூன்று வயது வரை தடுப்பு வாழ்க்கை இந்தக் காலப்பகுதியில் மனைவின் சகோதரர்களுடன் நெருக்கமாக பழகியவன்  அதனால் அவன் பார்க்கின்ற ஆண்கள் அனைவரும் மாமாவாக இருந்தனர்.  அப்பா என்ற உறவு அவனுக்கு தெரியாது. மூன்று வயதில் கூட புகைப்படத்தை காட்டி இதுதான் அப்பா என்று சொல்வதற்கு கூட மனைவியிடம் எனது புகைப்படமும் இல்லை. யுத்தம் எல்லாவற்றையும் பறித்து விட்டது.  ஒரு தடைவ நெளுக்குளம் தடுப்பு முகாமுக்கு மனைவியும் மகனும் சந்திப்பதற்கு வந்திருந்தனர். அப்போது மகனை நோக்கி தம்பி இங்க வாங்கோ என்றேன். அவன் தாயிடம் அம்மா மாமா கூப்பிடுறார் என்றான்.  அருகில் இருந்த முன்னாள்  சக போராளிகள் என்னை ஒரு மாதிரி என்னடா இது? என்ற வகையில் நேர்க்கினார்கள்.  பின்னர் அவர்களுக்கு நிலைமையை விளங்கப்படுத்தினேன்.
என்னை மாமா என்று அழைக்கும் போதெல்லாம் மனைவியின் கண்களில் கண்ணீர் வரும். நாம் யாரை நோவது. யுத்தம் இவற்றையே எமக்கு பரிசளித்துவிட்டு சென்றுள்ளது என்று எண்ணிக்கொண்டு வாழத்தொடங்கினோம். அவனது மூன்று வயது வரை தனது மாமாக்களுடன்தான் அதிகம் வாழ்ந்தான். அப்பா என்று கூப்பிடுவதற்கான வாய்ப்பு மகனுக்கு கிடைக்கவில்லை. அயல் வீட்டுக்காரரையும், பிற ஆண்களையும் மாமா என்றழைத்தவனுக்கு நானும் மாமாவாகே தெரிந்தேன். உண்மையில் மிகவும் வேதனையான விடயம். அதுவும் தடுப்பு முகாம்களில் சில வேளைகளில் தனிமையில் இருந்து யோசிக்கின்றபோது வாழ்க்கையே வெறுக்கும் எனத் தெரிவித்த விஜயன்
2009 தொடக்கம் 2011 வரை ஓமந்தை,  வெலிகந்த, நெளுக்குளம், பூந்தோட்டம் என நான்கு தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வுப்பெற்று குடும்பத்துடன் இணைந்தேன். மீள்குடியேற்றப்பட்டு கிளிநொச்சி உதயநகருக்கு வந்தோம் அப்போதும் என்னை மாமா என்றே அழைப்பான் தாய் அடிக்கடி அப்பா என்று எடு;த்துக் கூறிய போதும் அவன் அதற்கு உடனடியாக பழக்கப்படவில்லை அப்போது எனக்கும் மாமா என்ற வார்த்தை அப்பா என்பதாகவே ஒலிக்கும் பழகிவிட்டது. ஆரம்பத்தில் மாமா என்று சொல் செவிகளுக்குள் செல்லும் போது காதுக்குள் ஆணி  வைத்து அறைவது போலிருக்கும்.  வீட்டில் தாய் இல்லாத நேரம் என்னுடன் தனிமையில் இருக்கமாட்டான் என்னுடன் நெருக்கமாக பழகமாட்டான். ஒரு அப்பாக மகனுடன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ அது என் வாழ்க்கையில் இடம்பெறவில்லை. மழலை மொழியில் பேசி விளையாடி கடைக்கும் கடற்கரைக்கும் சென்று மகனுடன் மகிழ்ச்சியாய்  பொழுதை போக்கி செல்லமாக அவனுடன் சண்டையிட்டு இப்படி ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் இருந்தேன்   ஆனால் எல்லாம்  பகல் கனவாகிவிட்டது. எனது மகனின் மழலை பருவத்தில் அவனுடன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அது எதுவும் நடக்கவில்லை
என்னிடம்  அதை வாங்கி தா இதை வாங்கித்தா என்று கேட்க வேண்டிய வயதில் என் மகன் அவன் என்னிடம் அப்படி ஒரு நாளும் கேட்டது கிடையாது அவற்றையெல்லாம் தனது மாமாக்களிடம் கேட்பான்.  அவன் வளர்ந்த சூழலின் விளைவாக இருந்தது. வீட்டில் நானும் மனைவியும் தாயும் இருந்த காலத்தில் என்னுடன் கொஞ்சம் கொஞ்சம்  நெருங்க ஆரம்பித்தான். முன்பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த போது நான் அவனை ஏற்றி இறக்குவது வழக்கம் அப்போதே என்னிடம் நெருக்கமாக வந்தான் என்னை அப்பா என்று அழைப்பதற்கு அவனுக்கு நான்கு வருடகங்கள் சென்றது. இப்போது எனக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு  மகன் ஒரு மகள். மகன் என்னுடன் மிகவும் நெருக்கமாக  உள்ளான் இரவிலும் நான்  இல்லாது உறங்கமாட்டான்.
தற்போது நிரந்தர தொழில் இல்லை பிரத்தியோகமாக மாணவர்களுக்கு விஞ்ஞானம் கற்பிக்கின்றேன். உயர்தர மாணவர்களுக்கு இராசயனவியலும் படிப்பிக்கின்றேன். போதுமான வருமானம் இல்லாத போதும்  மனைவி பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டு. என்னை பொறுத்தவரை எனக்கு ஏற்பட்ட நிலமை எந்த அப்பாக்களும் ஏற்படக் கூடாது. அந்த வலிமிகவும் கொடியது. என்றர் விஜயகுமார்.
 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More