இ–சிகரெட்டுகள் விற்பனைக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1,061 மருத்துவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சிகரெட் பாவனையிலிருந்து விடுபட விரும்பும் சிலர், இ-சிகரெட் நோக்கித் தங்களது கவனத்தைத் திருப்புவது அதிகமாகி வருகிறது. இ-சிகரெட் மட்டுமல்லாமல் இலத்திரனியல் ஆவி சாதனங்கள உள்ளிட்ட நிக்கோடின் பயன்பாட்டு இலத்திரனியல் சாதனங்களைப் பரிந்துரைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இ-சிகரெட்டுகள் விற்பனை, உற்பத்தி, விநியோகம் தடை செய்யப்படுவதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சு அறிவித்ததனையடுத்து 12 மாநில அரசுகளும் இதற்குத் தடை விதித்துள்ள போதிலும் தற்போது இவற்றின் விற்பனை இணையதளங்கள் மூலமாகப் பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை எதிர்த்தே 1,061 மருத்துவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக்கு இ-சிகரெட் விற்பனைக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டுமென கோரி கடிதம் எழுதியுள்ளனர்.
புகையிலையினால் பாதிக்கப்பட்டோருக்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இக்கடிதம் அனுப்பப்படுவதாகவும் சிகரெட் பழக்கத்தைக் கைவிடுவதற்காக அளிக்கப்படும் நிக்கோடின் ரிப்ளேஸ்மெண்ட் தெரப்பியை இதோடு தொடர்புபடுத்திக் குழப்பிக்கொள்ளக் கூடாது எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகோடின் பயன்பாட்டு இலத்தரனியல்; சாதனங்கள் புகையிலை பழக்கத்தைக் கைவிடுவதற்கான வழியாக இல்லாமல் சந்தையில் அதைக் கூடுதலாக விற்பனை செய்வதற்கான வழிமுறையாகவே உள்ளன எனவும் மருத்துவர்கள் தங்களது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
நிக்கோடின் ஒரு விசம் என்பது மிகைப்படுத்தப்பட்டதல்ல என இ து குறித்து தெரிவித்துள்ள டாடா நினைவு மருத்துவமனையைச் சேர்ந்த தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர் பங்கஜ் சதுர்வேதி நிக்கோடின் பயன்பாட்டு இலத்திரனியல் சாதனங்களை சில மருத்துவர்கள் தவறாகப் பரிந்துரைப்பதும், அதன் விற்பனைக்கு வழிவகுப்பதும் துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்துள்ளார்