இணையதளங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கக் கோரிய வழக்கில், மத்திய தொலைத் தொடர்புத் துறை செயலர் மற்றும் இணைய சேவை வழங்குவோர் நலச் செயலர் ஆகியோரை நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில இணையப் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், சிறுவர்களைத் தவறாக வழிநடத்தும் ஆபாச வலைதளங்கள், புளூவேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகள் சமூக சீரழிவுக்கு வழிவகுக்கின்றன. அதனால், இதுபோன்ற இணையதளங்களுக்குள் சிறுவர்கள் நுழைவதைத் தடுப்பதற்கென இருக்கும் பேரண்டல் விண்டோ என்ற மென்பொருள் குறித்த விழிப்புணர்வை இணைய சேவை நிறுவனங்கள், ஊடகங்கள் வழியே பொதுமக்களுக்கு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை நேற்றையதினம் விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தொலைத் தொடர்புத் துறை செயலர் மற்றும் இணைய சேவை வழங்குவோர் சங்கச் செயலர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்பதனால் அவர்கள் இருவரையும் ஏப்ரல் 8ஆம் திகதி நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.