அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களாக இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவரால் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள இரு முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஆணைக்குழுவின் முன்னாள் அமைச்சர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களின் காப்புறுதித் திட்டத்திற்கான பொதுமக்களின் நிதியை அமைச்சு முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாகவும் புலமைப்பரிசில் நிதியத்தில் ஊழல் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழுவில் விஜேதாச ராஜபக்ஸ முறைப்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவிலிருந்து மாடுகளை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலும் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலும் முன்வைக்கப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலும் இன்று சாட்சியங்கள் பதிவுசெய்யப்படவுள்ளன.
இதேவேளை, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இதுவரை 1314 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதில் 51 முறைப்பாடுகள் காவல்துறைப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது