Home இலங்கை அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை நிறுத்தவும் – ஆளுநரிடம் வேண்டுகோள்

அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை நிறுத்தவும் – ஆளுநரிடம் வேண்டுகோள்

by admin

மாகாண சபையின் அதிகாரங்களை முழுமையாக்கி மேலும் செழுமைப்படுத்தப்பட வேண்டிய வழிவகைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் மாகாண சபையின் அதிகாரத்தை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் சிதவராசா வடக்கின் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஆளுநரிற்கு ஓர் நீண்ட வேண்டுகோள் கடிதமொன்றினை எழுதி உள்ளார். அதன் பிரதிகள் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சகல பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், எமக்கு இருக்கும் அற்ப அதிகாரங்களையும் மீண்டும் மத்திக்குக் கையளிக்கும் வகையில் ஆளுநர் எடுக்கும் முயற்சிகளை அரசிற்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் தடுக்க முன்வருமாறும் அவர்களிடம் கோரியுள்ளார்.

ஆளுநரிற்கு அவரினால் அனுப்பப்பட்ட வேண்டுகோள் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தாங்கள் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையிலும் வடக்கின் 14 பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்குவதற்கு முயற்சித்து வருகின்றீர்கள் என அறிகின்றேன். இப் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்குவது என்பது வடக்கு மாகாண சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட பாடசாலைகளை மத்திய அரசின் அதிகார வரம்பின் கீழ்க் கொண்டு வருவதற்கான ஓர் முயற்சியாகும்.

அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாணத்திற்கான அதிகாரப் பகிர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மாகாண சபையின் அதிகார வரம்பிற்குள் வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளை தேசிய பாடசாலைகள் என்றால் என்ன என்பதற்கு ஒரு விதமான வரைவிலக்கணமும் கொடுபடவில்லை.  பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் உள்ள இந்த குறைபாட்டினை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி முந்நாள் ஜனாதிபதி உட்பட பல அமைச்சர்கள் பல பாடசாலைளைத் தான்தோன்றித்தனமாகப் தேசிய பாடசாலைகள் ஆக்கியுள்ளனர். இக் குறைபாடு அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான சகல மட்டத்திலான கலந்துரையாடல்களிலும் சுட்டிக் காட்டப்பட்டதன் விளைவாக அண்மைக் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை என்பதனைத் தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

தமிழ் மக்கள் தாம் வாழும் பிரதேசங்களில் அதிகாரப் பகிர்வை வேண்டி நீண்ட காலமகாக நடாத்திய போராட்டங்களின் விளைவினால் ஏற்பட்ட, இலங்கை இந்திய ஒப்பந்த்தினைத் தொடர்ந்து  உருவாக்கப்பட்டதே பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் ஆகும். பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பான பல விடயங்கள் இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அண்மையில் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி கூட பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்படல் வேண்டும் என்பதனைச் சுட்டிக் காட்டி உள்ளார்.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைத் தொடர்ந்து இலங்கையில் கூடிய அதிகாரப் பகிர்வுடனான அரசியலமப்பு அமைய வேண்டுமென்ற அடிப்படையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இம்முயற்சிகளில் குறிப்பிடத் தக்கவைகளாவன சந்திரிகா அம்மையாரினால் ஆகஸ்ட் 2007 இல் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு மாற்றத்திற்கான வரைபிலும், யுPசுஊ என்று சொல்லப்படுகின்ற பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான குழுவினது அரசியலமைப்பு மாற்றத்திற்கான பரிந்துரையிலும், தற்போதைய அரசினால் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு மாற்றத்திற்கான மக்கள் கருத்தறிகுழுவினது பரிந்துரையிலும், அரசியல் நிர்ணய சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றத்திற்கான பரிந்துரையிலும், சகல பாடசாலைகளும் மாகாண சபையின் அதிகார வரம்பிற்குள்ளே வரவேண்டுமெனவே சிபார்சு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறாக மாகாண சபையின் அதிகாரங்களை முழுமையாக்கி மேலும் செழுமைப்படுத்தப்பட வேண்டிய வழி வகைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் இச் சூழலில் மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறான செயற்பாட்டின மூலம் மத்தியினுடைய நிதிப் பங்கீட்டில் மேலும் கூடிய நிதியினை இப் பாடசாலைகளிற்கு பெற்றுக கொள்ளலாம் என்பது தங்கள் குறிக்கோளாக இருக்கும் ஆயின் கல்வி அமைச்சின் ஊடாக நேரடியாகத் தங்களால் தெரிவு செய்யப்படும் பாடசாலைகளிற்கு அந் நிதியினை வழங்கக் கூடிய ஏற்பாடுகளைச் செய்ய முடியும். இது ஓர் சாதாரண நிறைவேற்றுச் செயற்பாட்டின் மூலம் செயற்படுத்தக் கூடிய விடயம். கிடைத்த அர்ப்ப அதிகாரங்களையும் மீண்டும் மத்திக்குக் கையளித்துத்தான் செயற்படுத்த வேண்டும் என்று இல்லை.

இப் பாடசாலைகள் தரமான பாடசாலைகளாக இருந்தும் ஆளுமையாக நிர்வகிக்கப்படவில்லை, அதனால் தான் மத்திக்குக் கையளிக்க வேண்டும் எனவும் அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. தங்களது நிறைவேற்றுச் செயற்பாட்டின் கீழ்தான் இப்பாடசாலைகள் உள்ளதால். அவற்றைத்; திறம்பட செயற்படவைப்பதற்கான சகல அதிகாரமும் தங்களிற்கு உள்ளது என்பதனைத் தங்களிற்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

கடந்த ஐந்து வருடங்களாக வட மாகாணத்தின் செயற்பாடுகள் ஆளுமையற்ற வினைத்திறனற்றவையாக அமைந்தவை என்பதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அது அதிகாரப் பகிர்வில் உள்ள குறைபாடு அல்ல. அதிகாரத்தில் இருந்தவர்களின் குறைபாடே ஆகும்.

ஆதலினால் மேற்படி தங்கள் முயற்சியினை உடனடியாக நிறுத்த வேண்டும் என மீண்டு;ம் கேட்டுக் கொள்கின்றேன்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

1 comment

Logeswaran March 27, 2019 - 5:18 pm

ஆளுநரின் நிறைவேற்றுச் செயற்பாட்டின் கீழ் பல பாடசாலைகள் உள்ளது. அவற்றை அவர் திறம்பட செயற்பட வைக வேண்டும். அதிகாரங்களை மத்திக்குக் கையளிக்க ஆளுநர் எடுக்கும் முயற்சிகளை தடுக்க வேண்டும்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More