குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற இருவர் , அந்த மோட்டார் சைக்கிளில் சென்று வீதிகளில் சங்கிலிகளையும் அறுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர் தலைமறைவாகியுள்ளார். தலைமறைவாகியுள்ள நபரை கைது செய்வதற்கு காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன். மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் உரிமையாளரால் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதேவேளை யாழ்.மருத்துவமனை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்து சென்றனர். இச் சம்பவம் நடைபெற்று சிறிது நேரத்தில் மானிப்பாய் வீதியிலும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சங்கிலி ஒன்றினை அறுத்து சென்றனர்.
குறித்த இரு சங்கிலி அறுப்பு சம்பவம் தொடர்பில் கபால் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டனர். சங்கிலி அறுக்கப்பட்ட இடத்திற்கு அண்மையாக பொருத்தப்பட்டு இருந்த சி.சி.ரி.வி.கமராவின் உதவியுடன் மோட்டார் சைக்கிளை அடையாளம் கண்டு அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது , அது கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் திருட்டு போன மோட்டார் சைக்கிள் என்பதனை கண்டறிந்தனர்.
தொடர்ந்து காவல்துறையின ; மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து , சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கொண்டனர். சந்தேக நபர்கள் அளவெட்டி பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு சென்ற போது சந்தேக நபர்களில் ஒருவர் தப்பி சென்ற நிலையில் மற்றையவர் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. அத்துடன் வீதிகளில் அறுத்த ஒன்றரை பவுண் மற்றும் இரண்டு பவுண் தங்க சங்கிலிகள் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கபட்டது.
கைது செய்யபட்ட நபரை காவல்துறையினர் தமது பாதுகாப்பில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , தப்பி சென்ற மற்றைய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.